Home One Line P2 செம்பனைத் தொழிலுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகள் இல்லை

செம்பனைத் தொழிலுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகள் இல்லை

684
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அந்தக் கட்டுப்பாடுகள் செம்பனைத் தொழிலுக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் செம்பனைத் தொழில், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மேலும் விலை வீழ்ச்சியைச் சந்திக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய செம்பனை உற்பத்தி நாடான மலேசியா, உலகின் 65 விழுக்காடு சமையல் எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்றைக்கு செம்பனை எண்ணெய் என்பது வெறும் சமையல் எண்ணெய் என்ற அளவில் மட்டுமில்லாமல், ஒப்பனைப் பொருட்கள் தொடங்கி, உணவுப் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலப் பொருளாக உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மலேசியாவில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் செம்பனைத் தோட்டங்களும், ஆலைகளும் பாதிக்கப்பட்டால், மலேசியாவின் செம்பனை எண்ணெயை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல நாடுகள் பிரச்சனைகளை எதிர்நோக்கும் என்பதோடு, மலேசியாவின் ஏற்றுமதி அளவும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, செம்பனைத் தொழில் கூட்டமைப்பு செய்திருந்த மேல்முறையீட்டை அமைச்சரவை ஏற்றுக் கொண்டு செம்பனைத் தொழிலுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக மூலத் தொழில் அமைச்சர் நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார்.

மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து செம்பனைத் தொழிலும் மூடப்படும் என்ற அச்சம் நிலவியதால், உள்நாட்டிலும், இந்தியா, சீனா போன்ற பெரியக் கொள்முதல்நாடுகளிலும் செம்பனை எண்ணெய் விலைகள் 5 விழுக்காடு உயர்ந்தன. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் செம்பனை உற்பத்தி மாதத்துக்கு 350 ஆயிரம் முதல் 700 ஆயிரம் டன் வரை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி நடந்திருந்தால், அதன் காரணமாக, இந்தியா கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும். உலகின் மிகப் பெரிய தாவர எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, ஒரு மாதத்துக்கும் குறைவான தாவர எண்ணெய் கையிருப்பையே கொண்டிருந்தது.

இந்தியா, மாதம் ஒன்றுக்கு 1.9 மில்லியன் டன் சமையல் எண்ணெயை பயன்படுத்துகிறது. இதில் ஏறத்தாழ 1.25 மில்லியன் சமையல் எண்ணெய் மாதம் ஒன்றுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. எஞ்சிய எண்ணெய் தேவை, உள்நாட்டில் இருந்தே பெறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா வசம் கிடங்குகளிலும், துறைமுகக் கிடங்குகளிலும் 1.5 மில்லியன் டன் சமையல் எண்ணெய் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

உலகின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் பயன்பாட்டு நாடாக இந்தியாவுக்கு அடுத்து சீனா திகழ்கிறது.

இதற்கிடையில், உலகின் மிகப் பெரிய செம்பனை உற்பத்தி நாடான இந்தோனிசியா கொவிட் 19 காரணமாக செம்பனைத் தொழிலை முடக்கி வைக்குமா இல்லையா என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.