கொவிட்-19 : மகாதீரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

    636
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர் – கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ லீ வுயென் சரவாக் பொது மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தற்போது தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    கொவிட் 19-இன் நச்சுயிரியால் பாதிக்கப்பட்டிருப்பதாக சாரிகெய் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ட்ரூ வோங் லிங் பியூ மார்ச் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

    அதைத் தொடர்ந்து அண்ட்ரூ வோங்குடன் தொடர்பில் இருந்த காரணத்தால் டாக்டர் கெல்வினுக்கும் கொவிட் 19 தொற்றிக் கொண்டு அவருக்கும் அந்த நச்சுயிரி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    #TamilSchoolmychoice

    டாக்டர் கெல்வின் தனக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பதாகக் கூறி கடந்த மார்ச் 17-ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

    அண்ட்ரூ வோங்குடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தனக்கு கொவிட் 19 பீடித்ததாக டாக்டர் கெல்வின் தெரிவித்திருந்தார்.

    டாக்டர் கெல்வினுடன் மகாதீர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதால், தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் முடிவை மகாதீர் எடுத்திருக்கிறார். இந்தத் தகவலை இன்று டிவி3 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் மகாதீர் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

    “சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன். 14 நாட்களுக்கு நாம் தனிமைப்படுத்திக் கொள்ளும் சுயக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நச்சுயிரி (வைரஸ்) மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும். நான் வெளியில் செல்ல முடியாது. பிறரைச் சந்திக்க முடியாது. கைகுலுக்க முடியாது. எனினும் கடவுள் அருளால் அப்படி வீட்டுக்குள்ளேயே இருப்பது எனக்குப் பிரச்சனையாக இல்லை” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.