Home One Line P1 கொவிட்-19: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலைத் தாண்டி சொந்த விதிகளை ஏற்படுத்த வேண்டாம்!

கொவிட்-19: சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலைத் தாண்டி சொந்த விதிகளை ஏற்படுத்த வேண்டாம்!

503
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைத் தாண்டி உங்கள் சொந்த விதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

காவல் துறை , இராணுவம், நகராட்சி மன்றங்கள் அல்லது பல்பொருள் அங்காடிகள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியை அமல்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

“சுகாதார அமைச்சினால் உத்தரவிடப்பட்ட விதியை மட்டும் செவிமடுங்கள்.”

#TamilSchoolmychoice

“முகக்கவசங்களை அணியாததால் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காத பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இது சரியல்ல.”

“அவர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஆலோசனை கூறலாம், ஆனால் வாடிக்கையாளர்கள் பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழைவதை அவர்களால் தடுக்க முடியாது.”

“மக்கள் தங்கள் வீட்டு பகுதிகளுக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும் தடுக்க சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன.”

“இதுவும் தவறு, ஏனெனில் இது காவல்துறையின் வேலை.”

“இராணுவம் கூட சாலைத் தடைகளை ஏற்படுத்தவில்லை, அவர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள்.”

“காவல் துறையினரும் இராணுவத்தினரும் கூட முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு உத்தரவிட முடியாது, ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மட்டுமே ஆலோசனை கூறுகிறார்கள்” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

சில பல்பொருள் அங்காடி மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளதாக பொதுமக்கள் அளித்த புகார்கள் குறித்து கருத்து கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தற்போது தனது ஆணையை மாற்றியுள்ளது. முன்னதாக, பல்பொருள் அங்காடி மையம், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பொது அல்லது தனியார் சந்தைகளுக்கு வரும்போது பொதுமக்கள் மூகக்கவசம் அணிய வேண்டும் என்று அது அறிவித்திருந்தது.

தற்போது, தமது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய பதிவில், மக்கள் இம்மாதிரியான வளாகத்தில் இருக்கும்போது முகக்கவசத்தை அணிய “ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று அது குறிப்பிட்டுள்ளது.