சென்னை – தமிழகத்தில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தெரிவித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருங்கள், எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
புதிதாக மேலும் மூவருக்கு இன்று கொவிட் -19 பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் ஓரிருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றாலும் இதுவரையில் யாரும் உயிரிழக்கவில்லை.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஊரடங்குகள் விதிக்கப்பட்டிருப்பதால் நேற்று முதல் தங்களின் சொந்த கிராமங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு செல்ல மக்கள் முனைந்தனர். இதன் காரணமாக, நகரங்களில் மட்டுமே இதுவரை தாக்கங்களை ஏற்படுத்தி வந்த இந்தத் தொற்று நோய் இனி கிராமங்களிலும் ஊடுருவலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.