Home One Line P2 நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கிய வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன்

நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கிய வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன்

296
0
SHARE

(இன்றும் நமது செவிகளில் ரீங்காரமிடும் மறக்க முடியாத பாடல்களை வழங்கிச் சென்றிருக்கும் வெண்கலக் குரலோன்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவு நாள் மார்ச் 24 ஆகும். அதனை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)

சென்னைத் தமிழிசைக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர், ‘கலை-மாமணி’ ‘வெண்கலக் குரலோன்’, ‘தங்கத் தமிழ்மகன்’ சி.கோவிந்தராஜன். நால்வர் பெருமக்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தோன்றிய சீர்காழி என்னும் ஊரில் தோன்றி, ‘கணியன்’ பூங்குன்றனார், ‘மணவை’ முஸ்தபா, போன்றோரைப் போல தன் பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்து சீர்காழி சி. கோவிந்தராஜன் என தன்னை அழைத்துக் கொண்ட இவரின் தமிழ் உச்சரிப்பும் கணீரெனும் குரலும் மறக்கவொண்ணாதது.

சென்னை தமிழிசைக் கல்லூரியில் இசை பயின்ற கோவிந்தராஜன், சிறுவயது முதலே பாட்டிலும் இசையிலும் பெருவிருப்பு கொண்டிருந்தார். சென்னை மத்திய இசைக் கல்லூரியின் பேராசிரியர் திருப்பாம்புர சாமிநாத பிள்ளையிடம் குருகுல கல்விவழி, தன் இசையறிவைப் பெருக்கிக் கொண்டவர் சீர்காழி.

ஆரம்பத்தில் இறைநேசப் பாடல்களையேப் பாடிக் கொண்டிருந்த இவர், திரைப்படத் துறையில் இணைந்தது புதிய வரவாகக் கருதப்பட்டது. பொன்வயல் என்ற திரைப்படத்திற்காக ‘சிரிப்புத்தான் வருகுதையா’ என்ற பாடல்தான் இவர் படிய முதல் திரைப்பாட்டு.

‘வண்ணக் கிளி’ என்ற திரைப்படத்தில் ‘மாட்டுக்கார வேலா உன் மாட்டை கொஞ்சம் பாத்துக்கடா’, ‘ஆத்துல தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க’, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ போன்ற பாடல்களெல்லாம் புகழ்பெற்ற பாடல்கள். எங்க வீட்டு மகா லெட்சுமி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டணந்தா போகலாமடி’; காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தின் ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற நகைச்சுவைப் பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் திகட்டாதவை.

‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே’, என்ற பாகப்பிரிவினை படப் பாடல், நாடோடி மன்னன் படத்தில் இடம் பெற்ற ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா’  போன்ற கருத்தான பாடல்களும், ‘வண்டு ஆடாத சோலையில்’, ‘வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே’, ‘கொங்கு நாட்டு செங்கரும்பே’ போன்ற கண்ணியமான காதல் பாடல்களும் சீர்காழி கோவிந்தராஜன் பாடியவை.

அகத்தியர், வா ராஜா வா, கந்தன் கருணை போன்ற திரைப்படங்களில் தனது உருவத்திற்கும், பாடல் திறமைக்கும் ஏற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நடிப்பிலும் முத்திரை பதித்தவர் சீர்காழியார்.

1990-ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்த கோவிந்தராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இசைத்துறை கலைப்புல முதன்மையராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு 1983-இல் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

கர்னாடக இசை பயின்றாலும் தமிழிசையிலும் தமிழ் வளர்ச்சியிலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த சீர்காழி கோவிந்தராஜன் ஐம்பத்தைந்து அகவையிலேயே இயற்கை எய்தியது தமிழ்க் குலத்திற்கு பேரிழப்பு என்பதில் மிகையில்லை.

1933-இல் பிறந்த இவர், 1988ஆம் ஆண்டு இதே நாளில் மீளாத் துயில் பூண்டார். இருப்பினும் இவரின் குரல் தமிழ் நேயர்தம் நெஞ்சங்களில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

-நக்கீரன்

Comments