கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயை இன்னும் மீறும் மக்களுக்கு எதிராக இந்த உத்தரவின் இரண்டாவது வாரத்தில் மேலும் ‘கடுமையான’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
இந்த உத்தரவின் முதல் வாரத்தில், காவல் துறையினர் விவேகத்துடன் செயல்பட்டதாகவும், நடமாட்டத்தை குறைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் இரண்டாவது வாரத்தில், இதனை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“இரண்டாவது வாரத்தில் அரசாங்கத்தின் ஆணையை பொதுமக்கள் மீறுவது கண்டறியப்பட்டால், உள்துறை அமைச்சராக நான் அனைத்து காவல்துறையினரையும் மேலும் நடவடிக்கை எடுக்கச் சொல்ல விரும்புகிறேன்.”
“நாங்கள் இன்னும் தீர்க்கமான நடவடிக்கை எடுப்போம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால், காவல்துறையினரிடம் கோபப்படக்கூடாது, ஏனெனில் ‘நீங்கள்’ (பொதுமக்கள்) சட்டத்தை மீறி நடந்துள்ளீர்கள்” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
இரண்டாவது வாரத்தில், செய்யப்பட்ட அனைத்து உத்தரவுகளும் முதல் வாரத்தின் அதே நிலையான இயக்க முறைமைக்கு இணங்க இருக்கும், ஆனால் காவல்துறை இன்னும் கண்டிப்பாக இருக்கும்.
“அவ்வளவு பிடிவாதமாக இருக்காதீர்கள் . நாங்கள் உங்களை வீட்டிலேயே இருக்க கேட்கிறோம். அடிப்படை தேவைகளை வாங்கும்போது, ஒரு நபர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார். வீட்டில் தங்குவதற்கான வழிமுறைகள் எளிமையானவை, அவ்வளவுதான்” என்று அவர் கூறினார்.