கோலாலம்பூர்: பொருளாதார ஊக்கத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘பந்துவான் பிரிஹாதின் நேஷனல்’ குறித்து சரிபார்க்கவும், அது தொடர்பான இணையப்பக்கங்களை பயன்படுத்துவதும் இன்றும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து சரிபார்க்கவும், புதிய தகவல்களை பதிவேற்றவும் ஏப்ரல் 30 வரை கால அவகாசம் இருப்பதாக உள்நாட்டு வருமான வரித்துறை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 1) இந்த சேவைத் தொடங்கியதும், வருமான வரித்துறையின் அகப்பக்கம் அதிகபடியான உள்நுழைவை எதிர்நோக்கியது. அதனால், பலரால் இந்த அகப்பக்கத்தில் தங்களின் தகவல்களை சரிபார்க்க இயலாமல் போனது.
இதே போல, ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) அகப்பக்கமும் இதே நிலையை எதிர்நோக்கியது. மக்கள், நேற்று முதல் ஐ-லெஸ்டாரி கணக்கு 2 நிதியைக் கோர விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, சந்தாதாரர்களுக்கு ஏப்ரல் மாதம் வரையிலும் கால அவகாசம் இருப்பதாக அவ்வாரியமும் தெரிவித்துள்ளது.