Home One Line P2 கொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 65 – நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவுதல் அதிகரிப்பு

கொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 65 – நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவுதல் அதிகரிப்பு

621
0
SHARE
Ad
கொவிட்-19 பாதிப்புகளால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிசாமுடின் மசூதி

புதுடில்லி – 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருந்தும், அதிக மக்கள் தொகை காரணமாக அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாமல் பொதுமக்களும், அரசாங்கமும் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கொவிட்-19 காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,059 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொளி வழி மாநாடு ஒன்றை நடத்தி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். மாநில முதல்வர்கள் தத்தம் மாநிலங்களில் எடுத்து வரும் முயற்சிகளும் மோடியிடம் விளக்கப்பட்டன.

நிசாமுடின் நிகழ்ச்சியால் அதிகரித்த கொவிட்-19 பாதிப்புகள்

#TamilSchoolmychoice

புதுடில்லியில் நிசாமுடின் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நபர்கள் மூலமாக கொவிட்-19 தொற்றின் பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவர்கள் நாடு முழுமையிலும் பல்வேறு ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.

அதன் காரணமாக, அவர்கள் சார்ந்த மாநிலங்களிலும் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் இதுவரையில் 378 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் இன்னும் முன்வந்து தங்களைப் பரிசோதித்துக் கொள்ளவில்லை. அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களுக்கு கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் நிசாமுடின் நிகழ்ச்சியை மத ரீதியாக விமர்சிக்க வேண்டாம் என இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியின் தென்பகுதியில் அமைந்திருப்பது நிசாமுடின் மர்காஸ் மசூதியாகும். பங்களாவாலி மசூதி என்றும் இது அழைக்கப்படுகிறது. தப்லிக் ஜமாத் என்ற விவரிக்கப்படும் மதப் பிரச்சாரம் தோன்றிய மையமாகவும், அத்தகைய பிரச்சாரத்திற்கான அனைத்துலக மையமாகவும் இந்த மசூதி கருதப்படுகிறது.