கோலாலம்பூர்: பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுபாங் 1 மக்கள் வீட்டுவசதி திட்டத்தில் (பிபிஆர்) பொது சுகாதாரப் பணிகளை நேரில் காண வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா காமாருடின் மீண்டும் இன்று வியாழக்கிழமை களத்தில் இறங்கினார்.
சுபாங் பள்ளத்தாக்கு பிபிஆர் 1- இல் உள்ள பொது சுகாதார பணிகளில் சூராவ், பல்நோக்கு மண்டபம், விளையாட்டு மைதானம் மற்றும் பொதுவான பகுதி ஆகியவை இந்த கிருமிநாசினி தெளிப்பு திட்டத்தில் அடங்கும். கொவிட்-19 தொற்றுநோய் பிபிஆர் பகுதிக்கு பரவாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆயினும், பொது சுகாதார பணிகள் நடந்து வரும் பகுதிகளில் மீண்டும் சுரைடா களம் இறங்கி, அது தொடர்பான புகைப்படங்களை தம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது, பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்பது பொதுமக்களுக்கு மட்டும்தானா, அமைச்சர்கள் இதற்கு விதிவிலக்கா என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
சுரைடாவின் இந்த செயல், அவர் சமூக அக்கறையை மதிக்காதவர் என்றும், அரசாங்கத்தின் ஆணையை புரிந்து நடக்கக்கூடியவர் அல்ல என்றும் ஒரு சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் நாசிர் இது போன்ற தருணங்களில் சுரைடா அரசியல் நாடகங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சாடியிருந்தார்.