புத்ரா ஜெயா – பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி அப்துல் ஹாடி அவாங் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதராக, அமைச்சருக்குரிய முழு அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஹாடி அவாங் இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் அப்போது இடம் பெறவில்லை.
73 வயதான ஹாடி அவாங் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இஸ்லாமிய மத விவகாரங்களில் அனுபவமும், அறிவாற்றலும் கொண்டவராக ஹாடி அவாங் பார்க்கப்படுகிறார். 1994 முதல் 2004 வரை திரெங்கானு மாநில மந்திரி பெசாராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
உலக முஸ்லிம் உலாமா சங்கத்தின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
சவுதி அரேபியாவின் மதினா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் ஷாரியா சட்டத்தில் பட்டம் பெற்ற ஹாடி அவாங், எகிப்தின் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அல்-அசார் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார்.
அவரது தகவல்களும், பின்புலமும் அடங்கிய பெர்னாமா வரைபடத்தைக் கீழே காணலாம்: