கோலாலம்பூர்: தனி ஒரு நபர் செல்ல வேண்டிய சுகாதார மையங்கள் 10 கி.மீ தூரத்தை கடந்து இருந்தால், அவர்கள் தாராளமாக 10 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
புதிய விதிகளை சட்டத்துறை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தாலும், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களும் உள்ளன என்று அவர் கூறினார்.
“சிகிச்சைப் பெற்று வருபவர்களை அனுமதிக்கலாம். எனவே நோயாளிகள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக ஒரு மருத்துவரைப் பார்க்க இருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (தொற்று நோய்களுக்குள் நடவடிக்கைகள்) 2020, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறைக்கு வருகிறது. வீட்டிலிருந்து 10 கிலோமீட்டருக்கு (கி.மீ) அதிகமாக இல்லாத சுற்றளவில் பயணங்களை அனுமதிக்கும் வரம்புகளை இது நிர்ணயிக்கிறது.