சென்னை – திரைப்படங்களில் மட்டும் அதிரடிக் காட்சிகளில் நடித்து விட்டு, மற்றபடி எதிலும் தலையிடாமல் அமைதி காத்து வரும் நடிகர் அஜித், கொவிட் -19 பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மொத்தமாக 13 மில்லியன் ரூபாய்களுக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளார்.
திரைப்பட நடிகர்களிலேயே அவர்தான் அதிகமாக கொவிட்-19 நிவாரண நிதி அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பிரதமரின் கொவிட்-19 நிவாரண நிதிக்கு 5 மில்லியன் ரூபாய் வழங்கியிருக்கும் அஜித் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு மேலும் 5 மில்லியன் ரூபாய்கள் அளித்துள்ளார்.
திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கு 2.5 மில்லியன் (25 இலட்சம் ரூபாய்) வழங்கியிருக்கும் அஜித், இதுவரையில் யாரும் செய்யாத புதுமையாக மற்றொரு அமைப்புக்கும் நன்கொடை வழங்கியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் ஊடகவியலாளர்களையும் பிஆர்ஓ (Public Relation Officer) எனப்படும் பொது உறவு பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய அமைப்பு பிஆர்ஓ யூனியன் ஆகும். இந்த அமைப்புக்கும் 2.5 மில்லியன் ரூபாய் (25 இலட்சம்) நிதி உதவி அளித்துள்ளார்.
பிஆர்ஓ யூனியன் அமைப்புக்கு இதுவரையில் நடிகர்கள் யாரும் நிதி உதவி அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அதிகமாக நிதி அளித்திருக்கும் அதே வேளையில் சில தரப்பினரின் தேவையறிந்து வித்தியாசமாகவும் வாரி வழங்கியிருக்கும் ‘தல’ அஜித்துக்கு சமூக ஊடகங்களிலும், அவரது இரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.