கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா தம்பதியினர் 14 நாட்கள் முழுமையான தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கொவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்களுக்கான பிரார்த்தனைகளை மேற்கொண்ட மக்களுக்கு மாமன்னர் தம்பதியினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாட்சில் ஷாம்சுடின் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மக்கள் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பரிந்துரைபடி நடக்க வேண்டும் என்று மாமன்னர் தம்பதியினர் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் வீட்டில் தங்குவதன் மூலம் கொவிட்-19 நோய்த்தொற்றை எதிர்க்க உதவ முடியும் என்று மாமன்னர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், இராணுவத்தினருக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்து, கொவிட்-19 பாதிப்பால் மரணமுற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தங்களின் ஆறுதலை மாமன்னர் தம்பதியினர் தெரிவித்துக் கொண்டனர்.