கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில், சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷன் கட்டிடத்தில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்தார். ஆனால், இவ்விவகாரம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
“கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டாம், யாரோ ஒருவர் தப்பிவிட்டார். சிலாங்கூர்- மலாயன் மென்ஷனில் வசிப்பவர்களுக்கு நாங்கள் உதவ விரும்புவதால் தப்பிக்கத் தேவையில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், தப்பி ஓடியவர் மலேசியரா அல்லது வெளிநாட்டினரா என்பதை அவர் வெளியிடவில்லை.