புதுடில்லி – இந்தியாவில் கொவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,734 -ஆக உயர்ந்திருக்கும் நிலையில் இதுவரையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மத்திய அரசாங்கம் கொவிட்-19 எதிரான போராட்டத்திற்காக மேலும் 15 பில்லியன் ரூபாய் (15,000 கோடி) நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது.
எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவைப் போன்று கொவிட்-19 பாதிப்புகளை அதிக அளவில் எதிர்நோக்கும் என எச்சரிக்கப்படும் வேளையில், தொடர்ந்து பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்திய அரசாங்க அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 மரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மாநிலங்கள் அளவில் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாநிலமாக 1,135 பாதிப்புகளோடு மகராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில் 738 பாதிப்புகளுடன் தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாட்டு கொவிட்-19 நிலவரம்
தமிழ் நாட்டில் புதன்கிழமை அடையாளம் காணப்பட்ட 48 பாதிப்புகளில் 42 பாதிப்புகள் புதுடில்லி நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்டவையாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும் 156 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
66 இஸ்லாமிய மத குருமார்கள் மீது வழக்குகள் பதிவு
இதற்கிடையில், ஊரடங்கு சட்டங்களை மீறி புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காகவும், சுற்றுப் பயணிகளுக்கான குடிநுழைவு அனுமதியோடு (விசா) நாட்டில் நுழைந்து, மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதற்காகவும் 66 பேர்களின்மீது தமிழக அரசு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இவர்களில் 8 இந்தோனிசியர்களும் அடங்குவர். மேலும் பல வெளிநாட்டவர்களும் இருக்கின்றனர். மலேசியர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இவர்களில் பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. சிகிச்சை முடிந்து குணமடைந்ததும் அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.