ஏப்ரல் 11 – பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ப் பிரிவுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் இந்த 13வது பொதுத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப்போவது இந்தியர் வாக்குகள்தான் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியிருக்கின்றார்.
ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் அவரது இந்த கூற்று உண்மையல்ல என்பதும், இந்தியர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவும், தமிழ்ப் பிரிவு தொலைக்காட்சி பேட்டி என்பதனால் இந்திய சமுதாய ஆதரவைப் பெறுவதற்காகவும் கூறப்பட்ட கருத்து இது என்பதும் புலப்படும்.
2008 பொதுத் தேர்தலில் இந்தியர்கள் தேர்தல் முடிவுகளை நிர்ணயித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த தேர்தலில் அவர்களின் வாக்குகள் சிதறி சின்னாபின்னமாகிவிட்டன என்பதும் அவ்வாறு அவர்களின் வாக்குகளை பிரித்தாள வியூகம் வகுத்ததும் பிரதமர் நஜிப்தான் என்பதும்தான் உண்மை.
2008 தேர்தலில் எவ்வாறு இந்தியர்கள் வெற்றியை நிர்ணயித்தார்கள்?
2008 பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் பிரச்சனைகளைத் தொடர்ந்தும், 5 ஹிண்ட்ராப் போராட்டவாதிகளின் சிறைவைப்பு காரணமாகவும், நாடு தழுவிய நிலையில் இந்திய சமுதாயத்தில் எழுந்த கொந்தளிப்பு – அதன் காரணமாக புறப்பட்ட உணர்ச்சி வேகமும், எழுச்சியும் ஒன்று சேர – ஏறத்தாழ 90 சதவீத இந்திய வாக்காளர்கள் ஒரே உணர்வோடு, ஒரே நோக்கத்தோடு தேசிய முன்னணிக்கு எதிராக வாக்காளித்தார்கள்.
அதனால்தான் நம்மால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடிந்தது.
பல நாடாளுமன்ற தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்ல முடிந்தது – சில மாநிலங்களையும் கைப்பற்ற முடிந்தது.
இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால், எதிர்க்கட்சிகள் வென்ற தொகுதிகளிலும், வெற்றி பெற்ற மாநிலங்களிலும் இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள் என்பதும் புலப்படும்.
வெற்றிபெற்ற மாநிலங்களும் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையோர மாநிலங்கள் என்பதும் – இந்தியர்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் என்பதும் தெளிவாகத் தெரியும்.
கிளந்தான் மாநிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
ஆனால், நம்மால் மட்டும் தான் 2008 மாற்றம் நடந்தது என நாம் கூறிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
மலாய், சீன வாக்குகளும் 2008 எதிர்க்கட்சி வெற்றிகளை உறுதி செய்தன
காரணம், நமது உணர்வுகளைப் புரிந்து கொண்ட மலாய்க்கார வாக்காளர்களும், சீன வாக்காளர்களும் கணிசமாக அளவில் தேசிய முன்னணிக்கு எதிராக திரண்டு வந்து 2008இல் வாக்களித்தார்கள்.
இல்லாவிட்டால் நமது எதிர்ப்பு வாக்குகள் கடலில் விழுந்த துளிகளாக காணாமல் போயிருக்கும்.
அதே வேளையில் ஒரு மலாய்த் தலைமைத்துவம் இல்லாமல் – அதுவும் அன்வார் இப்ராகிமைப் போன்ற மலாய் உணர்வுகளும், இஸ்லாமியப் பின்னணிகளும் கொண்ட ஒரு பிரபலமான – போராட்டங்களின் மொத்த உருவமான ஒரு மலாய் தலைவர் இல்லாமல்- எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் ஒற்றுமையாய் நின்றிருக்கவும் முடியாது, மலாய் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக திசை திருப்பியிருக்கவும் முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமாக ஒவ்வொரு தொகுதியிலும் தேசிய முன்னணிக்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சியை மட்டும் நிறுத்தி வைப்பதில் ஒற்றுமையோடும், வியூகத்தோடும் எதிர்க்கட்சிகள் செயல்பட்டதனால், தேசிய முன்னணிக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒரே கட்சிக்கு ஆதரவாக எளிதாக திசை திருப்பி வெற்றிக் கனிகளை எதிர்க்கட்சிகளால் பறிக்க முடிந்தது என்ற அரசியல் சித்தாந்தத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.
இவையெல்லாம் ஒரே முனையில் ஒன்று சேர்ந்தபோது, அதோடு சேர்ந்து இந்தியர்களின் 90 சதவீத வாக்குகளும் இணைந்து கொள்ள 2008 பொதுத் தேர்தலில் நம்ப முடியாத மாற்றங்கள், திருப்பங்கள் நேர்ந்தன.
ஆனால் இப்போது நடப்பது என்ன?
இன்றைக்கு ஹிண்ட்ராப் இயக்கம் பல துண்டுகளாக – பல குழுக்களாக சிதறிக் கிடக்கின்றது.
நஜிப் தேசிய முன்னணி தலைமையை ஏற்றவுடன் தானே முன்னின்று ஹிண்ட்ராப் இயக்கத்தை இரண்டாக உடைதஹிண்ட்ராப் இயக்கத்தின் தாரக மந்திரமாக விளங்கிய ‘மக்கள் சக்தி’ என்ற முழக்கத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் பயன்படுத்தவிடக் கூடாது என்ற அரசியல் வியூகத்தோடு, அந்த முழக்கத்தின் பெயரால் அரசியல் கட்சி ஒன்றை அமைத்து அதற்கு ஹிண்ட்ராப் போராட்டவாதியான தனேந்திரனை பிரித்தெடுத்து தலைவராக்கியது இதே நஜிப்தான்.
அந்த கட்சியை தோற்றுவித்ததும், கட்சி தொடக்க விழாவில் நேரடியாக கலந்து கொண்டு தொடக்கி வைத்ததும் நஜிப்தான்.
இந்திய வாக்குகள் ஒரே திசையில் – ஒரே கட்சிக்காக விழுந்தால் – தேசிய முன்னணிக்கு ஆபத்து என்பதை 2008 பொதுத் தேர்தல் முடிவுகளை வைத்து உணர்ந்த தேசிய முன்னணியின் தலைமைத்துவம், இந்திய வாக்குகளை சிதறடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்தது என்பதுதான் உண்மை.
ஆனால் தேசிய முன்னணியின் இந்த குரூரமான அரசியல் வியூகத்தை நன்கு தெரிந்திருந்தும் அந்த சதி வலையில் நமது ஹிண்ட்ராப் சகோதரர்களே சிக்கிக் கொண்டதுதான் நமக்கு நிகழ்ந்த சோகம்!
ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு கிடைத்த செல்வாக்கை, அதற்கு ஆதரவளித்த இந்திய சமுதாயத்தின் உணர்வுகளை தவறாக புரிந்து கொண்ட ஹிண்ட்ராப் தலைவர்கள் ஆளுக்கு ஆள் தலைவராகிக் கொண்டார்கள்.
ஹிண்ட்ராப் இயக்கம் தொடங்கியதன் நோக்கத்தையும் – அதற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு ஏன் கிடைத்தது என்ற அடிப்படைக் காரணத்தையும் சௌகரியமாக மறந்துவிட்டு – ஹிண்ட்ராப்பை தங்களின் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பகடைக் காயாக ஒவ்வொருவரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
சிறை சென்ற ஐவரில் பி.உதயகுமார் இன்றைக்கு – ஒரு நாள் ஹிண்ட்ராப் என்ற பெயரில் அறிக்கை விடுகின்றார் – மற்றொரு நாளில் தனது அரசியல் கட்சியான மனித உரிமைக் கட்சியின் பெயரால் அறிக்கை விடுகின்றார். ஆகக் கடைசியாக சில தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கணபதிராவ், மனோகரன் மலையாளம் இருவரும் நீண்ட காலமாக ஜசெகவில் இருக்கின்றார்கள் – இப்போதும் தொடர்கின்றார்கள்.
வசந்தகுமார் பிகேஆர் கட்சியில் இணைந்து விட்டார். வழக்கறிஞர் கங்காதரன் மட்டும் நேரடி அரசியலில் சேராமல் ஒதுங்கிக் கொண்டார்.
வேதமூர்த்தியோ, நான்தான் உண்மையான ஹிண்ட்ராப் என உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றார். அவர்களே 5 ஆண்டு திட்ட வரைவு ஒன்றை வகுத்துக் கொண்டு, இதுதான் இந்திய சமுதாயத்தின் விடிவெள்ளி என்றும், தேசிய முன்னணியோ பக்காத்தான் கூட்டணியோ இதனை அப்படியே ஏற்றுக் கொண்டால் இந்திய சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்றும் காலத்துக்கு ஒவ்வாத – நாம் வெறும் 7 சதவீதம் இருக்கும் – ஒரு பல இன நாட்டில் செயல்படுத்தமுடியாத – திட்டங்களை முன் வைக்கின்றார்கள்.
இவ்வாறாக ஹிண்ட்ராப் இயக்கத்தை தேசிய முன்னணி அரசு ஒருபுறம் துண்டாடல் செய்ய – இன்னொரு புறத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினரே தங்களுக்குள் பிரிவினைகளை உருவாக்கிக் கொண்டு ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்ற சோக சரித்திரமும் நிகழ்ந்து முடிந்துவிட்டது.
நஜிப்புடன் ஒரே ஒரு சந்திப்பை நடத்திவிட்டு, அந்த சந்திப்பின் விவரங்களையும் வெளியிடாமல் – இரண்டாவது சந்திப்பைக் கூட நடத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் – ஆனால் தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையில் எங்கள் கோரிக்கைகளின் அம்சங்களும் உள்ளடங்கியிருக்கின்றது என தங்களுத் தாங்களே கூறிக் கொள்ளும் கேலிக் கூத்தும் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
ஐபிஎப் பிரிவினைக்கும் நஜிப்தான் காரணம்!
அதே போல டான்ஸ்ரீ பண்டிதனால் தொடங்கப்பட்ட ஐபிஎப் என்ற பலமான அரசியல் இயக்கம் இன்றைக்கு மூன்று அணிகளாக பிரிந்து கிடப்பதற்கும் தேசிய முன்னணியின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என்பதும், சங்கங்களின் பதிவதிகாரி ஐபிஎப் விவகாரத்தில் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் காலம் கடத்துவதும்தான் காரணம் என்பதும் ஐபிஎப் கட்சியினருக்கே நன்கு தெரியும்.
பிரதமர் நினைத்தால் அரசியல் ரீதியாகவும் – சங்கங்களின் பதிவதிகாரி மீதுள்ள அதிகார ரீதியாகவும் – ஐபிஎப் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து விடலாம். ஆனால் அதைச் செய்ய தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு ஏனோ மனம் வரவில்லை.
இந்தியர்களை இனவாரியாக பிரித்தது தேசிய முன்னணி அரசு
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து, ஆங்காங்கு எல்லா இந்திய அரசு சாரா அமைப்புக்களுக்கும் இலட்சக்கணக்கான ரிங்கிட் மான்யங்களாக தேசிய முன்னணி அரசால் நஜிப் பதவியேற்றவுடன் ஒதுக்கப்பட்டது.
ஆலயங்களுக்கும் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கேட்டவுடன் மான்யங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் காலம் காலமாக ம.இகாவின் வழி வழங்கப்பட்ட இந்த மான்யங்கள் – அதன் மூலம் ம.இ.காவை ஒரு பலம் மிக்க அரசியல் சக்தியாக உருவாக்க வழங்கப்பட்ட இந்த மான்யங்கள் – பிரதமர் நஜிப் காலத்தில் பெரும்பாலும் நேரடியாக வழங்கப்பட்டன.
அதனால் ம.இ.காவும் தனது முக்கியத்துவத்தையும், அரசியல் பலத்தையும் இழந்தது.
20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் – அரசாங்கத்தால் இவ்வளவு நாளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்த இந்த கல்வி நிலையம் – திடீரென்று பல மில்லியன்களை மான்யமாகப் பெற்றது. நஜிப்பே இந்த நிலையத்தின் சில நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொண்டார்.
2007 ஹிண்ட்ராப் பேரணியில் முக்கிய போராட்டக் களமாக விளங்கி கறை பூசிக் கொண்ட பத்துமலைத் திருத்தலம் பிரதமர் அடிக்கடி விஜயம் செய்யும் திருத்தலமாக மாறியது.
தொடர்ந்து இந்திய சமுதாயம் இன வாரியாக, ஜாதி வாரியாக அடையாளம் காணப்பட்டு தேசிய முன்னணி தலைமைத்துவத்தால் பிரிக்கப்பட்டார்கள்.
மலையாளிகளின் “அம்மா” இயக்கம், தெலுங்கு மக்களின் சங்கம், மற்றும் சீக்கியர்கள் என இனவாரியாக மான்யங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் பிரச்சனைகள் கவனிக்கப்படும் என தேசிய முன்னணி தலைமைத்துவம் அவர்களுக்கு தனித் தனியாகவும்- நேரடியாகவும் உறுதிமொழிகளும் வழங்கியது.
காலங்காலமாக ம.இ.கா மூலமாக அரசாங்கத்தை அணுகி வந்த இந்தியர் அமைப்புக்கள் இப்போது நேரடியாக பிரதமரோடு தொடர்புகள் கொண்டிருக்கின்றன. பிரதமர் அலுவலகமும் அவர்களோடு நேரடியாக சந்திப்புக்கள் நடத்துகின்றது.
தொடர்ந்து, ஜாதி சங்கங்களுக்குக்கூட அரசாங்க மான்யங்கள் வழங்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எப்போதும் ம.இ.கா மூலமாக அரசாங்கத்தை அணுகி வந்த இந்திய சமூக அமைப்புக்களும், இன ரீதியான சங்கங்களும் இதனால் ம.இ.காவை புறக்கணித்தன.
அதனால்தான் ம.இ.காவும் இன்றைக்கு அரசியல் பலமிழந்து, சிதைந்து நிற்கின்றது என்பதும் இதற்கெல்லாம் நஜிப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்ட பிரித்தாளும் நடவடிக்கைகள்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எந்த தொகுதியிலும் வெற்றியை இந்திய வாக்காளர்கள் நிர்ணயம் செய்ய முடியாது
இதனால் வரப் போகும் பொதுத் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் இந்திய வாக்குகள் மூன்று பிரிவுகளாக உடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வாக்காளர்களில் ஏறத்தாழ 33 சதவீதத்தினர் – அதாவது மூன்றில் ஒரு பகுதியினர் தேசிய முன்னணிக்கு உறுதியாக வாக்களிப்பர் என எதிர்பார்க்கலாம். நஜிப்பின் அணுகுமுறையால் பல இந்தியர்கள் மனமாற்றம் பெற்றிருக்கின்றனர் என்பதை நாம் மறுக்க முடியாது.
ஹிண்ட்ராப் பிரச்சனைகள் எதுவும் இல்லாத பட்சத்தில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் தாராளமாக வழங்கும் “அன்பளிப்புகளினால்” கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களில் பலர் மீண்டும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் நிலைமை திரும்பும்.
இன்னொரு, மூன்றில் ஒரு பகுதி இந்திய வாக்காளர்கள், மக்கள் கூட்டணிக்கு உறுதியாக வாக்களிப்பார்கள். நன்கு படித்தவர்கள், இளைய சமுதாயத்தினர், எதிர்க்கட்சியினரோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் என இந்த பிரிவினர் மக்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
எஞ்சிய மூன்றில் ஒரு பகுதியினர் நடுநிலை வாக்காளர்கள் என நாம் கொள்ளலாம். இவர்களின் வாக்குகள் எந்த திசையில் செல்லும் என்பதை நான் அறுதியிட்டுக்கூற முடியாது.
நகர்ப்புறங்களில் இவர்கள் மக்கள் கூட்டணிக்கே வாக்களிக்கும் வாய்ப்பு அதிகம். புறநகர்ப் பகுதிகளிலும், கிராம, தோட்டப் புறங்களிலும் இருப்பவர்களும் தங்கள் தொகுதியின் வேட்பாளர்கள், உள்ளூர் சூழ்நிலைகள், என பல அம்சங்களைக் கருத்தில்கொண்டு வாக்களிப்பார்கள்.
தொகுதிக்கு தொகுதி இந்த 33 சதவீத நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் சூழ்நிலைக்கு ஏற்ப திசை மாறும் எனலாம்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் சொற்பமாக இருக்கக் கூடிய இந்திய வாக்குகள் இவ்வாறு பிரியும் என்பதால் அவர்களின் வாக்குகளின் பலன்கள் தேசிய முன்னணிக்கும் கிடைக்காது. மக்கள் கூட்டணிக்கும் கிடைக்காது என்பதுதான் உண்மை.
குறிப்பாக நகர்ப்புறங்களில் 60 சதவீத த்திற்கும் மேற்பட்ட இந்திய வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு சாதகமாகவே செல்லும். ஆனாலும், நகர்ப்புற தொகுதிகளில் எல்லாம் பெரும்பான்மையாக சீனர்கள் இருப்பதால் – அவர்களின் வாக்குகள் மக்கள் கூட்டணிக்குத்தான் செல்லும் என்பதால் – நகர்ப்புறங்களில் இந்திய வாக்குகள் மக்கள் கூட்டணி வெற்றியாளரின் பெரும்பான்மையைக் கூட்டுமே தவிர அவரது வெற்றியை நிர்ணயிக்காது. அதை நிர்ணயிக்கப்போவது சீன வாக்குகள் தான்!
உதாரணமாக ஒரு தொகுதியில் இந்திய வாக்குகள் 50:50 சதவீதமாக பிரிகிறது என்றால், அதனால் இரண்டு தரப்பு வேட்பாளருக்கும் பலன் கிடைக்கப் போவதில்லை. மாறாக அங்குள்ள சீன, மலாய் வாக்குகள் யாருக்கு கிடைக்கின்றன என்பதை வைத்துத்தான் அந்த தொகுதியின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
மலாய் வாக்குகளின் நிலைமை….
அடுத்து கிராம, நகர்ப்புறங்களில் மலாய் வாக்குகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், அங்கும் மலாய் வாக்குகள்தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.
தற்போது நடப்பது மலாய்த் தலைமைத்துவ போராட்டம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மலாய்க்காரர்களுக்கு தலைமையேற்கப் போவது நஜிப்பா அல்லது அன்வாரா என்பதுதான் இப்போதைய போராட்டம்.
மலாய்க்காரர்கள் ஆதரிக்க வேண்டிய கட்சி அம்னோவா அல்லது பிகேஆரும் பாஸ் கட்சியும் இணைந்த கூட்டணியா என்பதுதான் இந்த தேர்தலில் மலாய்க்காரர்கள் எடுக்கப் போகும் முடிவு.
மலாய் வாக்குகள் பிரிந்தாலும், அவர்களின் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதால் – அதில் ஒரு பகுதி, குறைந்தது 50 சதவீதம் மக்கள் கூட்டணிக்குவிழுந்தால், அந்த வாக்குகள் சீன வாக்குகளோடு இணையும் போது பல தொகுதிகள் மக்கள் கூட்டணியின் வசமாகும்.
மத்திய அரசாங்கம் அமைவது சபா, சரவாக் மக்களின் கையில்
மேலும் முக்கியமாக, கடந்த முறை தீபகற்ப மலேசியாவைத் தாக்கிய அரசியல் சுனாமி, சபா, சரவாக் மாநிலங்களின் கரையைத் தொடாமலேயே சென்றுவிட்டது.
ஆனால் இந்த முறை அப்படியல்ல!
சரவாக் மாநிலத்தில் மக்கள் கூட்டணி கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சபா மாநிலத்திலோ, அரசியல் பிரச்சனைகள் – கள்ளத்தனமான அடையாள அட்டைகள், லகாட் டத்து ஊடுருவல்கள் போன்ற விவகாரங்களால்- கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளன.
எனவே, மத்தியில் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமானால் சபா, சரவாக் மாநில மக்களின் வாக்குகள் எவ்வாறு செல்லப் போகின்றது என்பதை வைத்துத்தான் முடிவு செய்ய முடியும்.
முடிவுரையாக, இந்தியர்கள் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்வார்கள் என நமக்கு நாமே பீற்றிக் கொண்டிருந்த அரசியல் சூழ்நிலை 13வது பொதுத் தேர்தலில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சீனர்கள் முழுமையாக இந்த முறை மக்கள் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்திருப்பதால் அவர்கள்தான் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்யப் போகும் சக்தியாகத் திகழப் போகின்றார்கள்.
இந்தியக் கட்சிகள், இந்தியத் தலைவர்கள் தங்களுக்குள் பிரிந்து கிடப்பதால், அவர்களை இணைப்பதற்கு கடந்த முறை ஹிண்ட்ராப் விவகாரம் இருந்ததைப் போன்று இந்த முறை எதுவும் இல்லை என்பதால் இந்திய வாக்குகளுக்கு 2008இல் இருந்த சக்தி இந்த முறை இல்லை என்பதே கசப்பான உண்மை.
மலாய், சீன வாக்குகள் சரி சமமாக இருந்து இந்திய வாக்குகள் 10 அல்லது 20 சதவீதம் இருக்கும், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தொகுதிகளில்தான் இந்திய வாக்குகள் அந்த தொகுதி வேட்பாளர்களால் கொஞ்சம் கவனத்தைப் பெறும்.
ம.இ.காவும் இந்த முறை பலவீனமான தலைமைத்துவத்துடன் – நாடு தழுவிய நிலையில் இந்தியர்களை பிரச்சார பலத்தால் இணைக்க முடியாத நிலைமையில் – வாக்குகளை திரட்ட முடியாத தலைவர்களைக் கொண்டு – அதன் அரசியல் சக்தியை இழந்து நிற்கின்றது.
இந்திய வாக்குகள் சொற்ப எண்ணிக்கையில் இருப்பதாலும், மூன்று நான்கு திசைகளில் பிரிந்து கிடப்பதாலும், நமது வாக்குகள் அதன் வீரியத்தை இழந்து – சக்தியை இழந்து யாருக்குமே பயன்படாமல் போகும் என்பதுதான் இந்த தேர்தலில் நாம் கற்றுக் கொள்ளப் போகும் பாடம்.
-இரா.முத்தரசன்