கோலாலம்பூர்: சுகாதார அமைச்சின் இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நாட்டில் கொவிட்-19 பாதிப்பைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்காக உலகின் சிறந்த மற்றும் நம்பகமான மூன்று மருத்துவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்த அங்கீகாரத்தை சீன தொலைக்காட்சியான குளோபல் டிவி நெட்வொர்க் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் அந்தோணி பாசி மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த டாக்டர் ஆஷ்லே புளூம்பீல்ட் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மூவரும் கடந்த சில வாரங்களாக மிகவும் நம்பகமான தகவல்களை ஆதாரமாக தந்ததற்கும், இந்த பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட பீதியை அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு போக்கி, வெற்றிகரமாக சமாதானப்படுத்துவதற்கும் பொது பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
டாக்டர் நுர் ஹிஷாம் அப்துல்லா கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சின் இயக்குனர் பதவியை வகித்து வருகிறார். சமூக ஊடக தளங்களில் கொவிட்-19- இன் தற்போதைய நிலைமை குறித்து அடிக்கடி ஆகக் கடைசி தகவல்களை வெளியிட்டு வருவதால், மலேசியர்களால் அவர் மிகவும் நம்பகமான நபர் என்று கருதப்படுகிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பும் எந்தவொரு கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்ததற்காக அவர் பாராட்டப்படுகிறார்.