Home One Line P2 இந்தியாவின் “ஹைட்ரோக்சிகுளோரோகுயின்” மருந்து மலேசியா உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியாவின் “ஹைட்ரோக்சிகுளோரோகுயின்” மருந்து மலேசியா உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஏற்றுமதி

791
0
SHARE
Ad

புதுடில்லி – நீண்ட காலமாகவே மருந்துகள் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் இந்தியா கொவிட்-19 பாதிப்புக்கு சிறந்த தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ‘ஹைட்ரோக்சிகுளோரோகுயின்’ என்ற மாத்திரையின் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பதோடு உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளது.

இந்த மாத்திரையை 55 நாடுகளுக்கு முதற்கட்டமாக விற்பனை செய்யவும், மானியமாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இந்த மருந்தை இந்தியா அனுப்பியுள்ளது.

21 நாடுகளுக்கு ஹைட்ரோ மருந்து விற்பனை செய்யப்படவிருக்கிறது. எஞ்சிய நாடுகளுக்கு குறைந்த அளவிலான மருந்துகளை மானியம் அடிப்படையில் இலவசமாக வழங்கி உதவிபுரிய இந்தியா முடிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஹைட்ரோ மருந்தை மலேசியாவுக்கும் விற்பனை செய்ய இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக மலேசிய வெளியுறவுத் துணையமைச்சர் கமாருடின் ஜபார் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 89,100 மாத்திரைகளை மலேசியா அனுப்பி வைக்க ஏப்ரல் 14-ஆம் தேதியன்று இந்தியா அனுமதி அளித்துள்ளதாகவும் கமாருடின் ஜபார் தெரிவித்தார்.

மலேரியா நோய்க்கு எதிர்ப்பு மருந்தாகப் பயன்படும் “ஹைட்ரோக்சிகுளோரோகுயின்” மாத்திரைகள் கொவிட்-19 பாதிப்புகளுக்கும் சிறந்த தீர்வாகத் திகழ்வதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மருந்தை உலகிலேயே மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனினும், இந்த மருந்துக்கான ஏற்றுமதித் தடையை அண்மையில் இந்திய அரசாங்கம் மீட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலம் மகராஷ்டிரா

இதற்கிடையில் இந்தியா முழுமையிலும் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 12,380 ஆக இன்றுவரை உயர்ந்துள்ளது. இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 414-ஐ தொட்டிருக்கிறது.

மே 3 வரை இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படவிருக்கும் நிலையில் மிக அதிகமான பாதிப்புகளைக் கொண்ட மாநிலமாக மகராஷ்டிரா திகழ்கிறது.

3,000 கொவிட்-19 பாதிப்புகளை மகராஷ்டிரா மாநிலம் கொண்டிருக்கிறது. டில்லியில் இதுவரையில் 1,500 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.