Home வணிகம்/தொழில் நுட்பம் சொல்வளம் : புதிய பதிகை வெளியீடு கண்டது!

சொல்வளம் : புதிய பதிகை வெளியீடு கண்டது!

1298
0
SHARE
Ad

மூன்று ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த சொல்வளம் என்னும் சொல் விளையாட்டுச் செயலியில், பல முன்னேற்றங்களைச் சேர்த்து, 2.0ஆம் பதிகையாகச் சில நாள்களுக்குமுன் வெளியிட்டோம். விளம்பரங்கள் இன்றித் தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இதன் பயன்பாடு, பெரும்பாலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே உள்ளடங்கி இருந்தது.

தற்போது இன்னும் சில முன்னேற்றங்களுடன் 2.1ஆம் பதிகையை உலகளாவிய அளவில் வெளியிட்டுள்ளோம்! இவ்விரு பதிகைகளிலும் சேர்க்கப்பட்ட புதிய கூறுகளை இங்கே பட்டியலிடுகின்றோம்:

#TamilSchoolmychoice

1. புதுப்பிக்கப்பட்ட சொற்பட்டியல்

சொற்களின் பொருள் விளங்கவில்லை என்னும் குறை ஒருபுறம் இருக்க, சில சொற்களை உச்சரிக்கவே முடியவில்லை என்று பயனர்கள் சிலர் அவ்வப்போது சொல்லி வந்தனர். முதலாவது குறையை எளிதில் நீக்க இயலாது. இருந்தாலும் சில புதிய அணுகுமுறைகளை ஆராய்ந்து வருகின்றோம்.

இரண்டாவது குறையை 2.1ஆம் பதிகையில் நீக்கியுள்ளோம். கடினமான பல சொற்களை நீக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான புதிய சொற்களைச் சேர்த்துள்ளோம். உடனே பொருள் விளங்காவிட்டாலும், இவற்றை உச்சரிக்க முடிந்தால் விளையாடுவதற்கும் எளிதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

மேலும், அதிகமான சொற்கள் பட்டியலில் இருந்தால், ஏற்கனவே வந்த சொற்கள் அதே ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்க்கலாம். சொற்களுக்கான பொருளை வழங்கும் வசதியை அடுத்தடுத்த பதிகைகளில் ஆராய்வோம்.

2. ஊக்கப்புள்ளிகள்

சொல்வளம் விளையாடுவதற்கு எளிதாக உள்ளது என்றாலும், வெல்வதற்குச் சிறமமாக உள்ளது என்ற கருத்தும் வந்து சேர்ந்தவாறே இருந்தது. முயற்சிக்கும் வெற்றிக்கும் ஊக்கப் புள்ளிகள் (bonus points) வழங்கப்பட்டால் தொடர்ந்து விளையாட ஆர்வம் இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டே 2.1ஆம் பதிகையில் ஊக்கப்புள்ளிகளைச் சேர்த்துள்ளோம். தொடர்ந்து வெற்றிபெறும் தேடல்களுக்கும், மொத்தப்புள்ளிகளில் தொடர்ந்து ஏற்படும் முன்னேற்றங்களுக்கும் இனி ஊக்கப்புள்ளிகள் வழங்கப்படும். புள்ளிகளில் விவரங்களும் செயலியிலே சேர்க்கப்பட்டுள்ளது.

புள்ளிகள்புள்ளிகள் தொடர்பான விவரங்களைக் காட்டும் திரைகள்


3. இசையும் அணிகளும்


விளையாடுவோரின் உள்ளக்களிப்பிற்காக ஒரே ஒரு பின்னணி இசையைப் பழைய பதிகையில் சேர்த்திருந்தோம். புதிதாக வந்துள்ள பதிகைகளில் ஐந்து வெவ்வேறு இசைகளையும், விளையாட்டுச் சூழலுக்கான அணிகளையும் (themes) சேர்த்துள்ளோம். இவற்றுள் ஏதேனும் ஒன்றில் சோர்வு ஏற்பட்டால் மற்றொன்றிற்கு மாறிவிடலாம். அதன்பின், விளையாட்டே வேறு உணர்வைத் தரும்!

சொல்வளம் – அணிகள் வெவ்வேறு அணிகளில் விளையாட்டுத் திரை

4. தனிப்பட்ட குறிப்புகள்

‘உலகின் முதல் 10’ என்னும் இடத்திற்குப் போட்டியிட, ஒவ்வொருவரின் தனிப்பட்ட அடையாளத்திற்காக, பழைய பதிகையில் அவரவர் மின்னஞ்சலைப் பதிவு செய்யக் கேட்டிருந்தோம். செலுத்தப்படும் மின்னஞ்சல்களை கூகுளுடன் சரிபார்க்க வேண்டி இருந்தது. அதனால் கூகுள் மின்னஞ்சல்களே ஏற்றுக் கொள்ளப்பட்டன. கூகுள் மின்னஞ்சல் இல்லாதவர்கள் ‘உலகின் முதல் 10’ இடத்திற்குப் போட்டியிட வாய்ப்பில்லாமல் இருந்தது.

இந்தக் குறை, இரண்டாம் பதிகையில் நீக்கப்பட்டது. இனி அவரவர் விரும்பும் அழைப்புப் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பெயரோடு அவரவர் நாட்டையும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை இயல்பாகவே சொல்வளம் கண்டறிந்து விடும். ஆனால் மற்ற நாடுகளைச் சேந்தவர்கள் அழைப்புப் பெயரைப் பதியும்போது நாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.¹ அழைப்புப் பெயர்கள் இனி, தமிழிலும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது!

5. விளம்பரங்கள்

செல்லினம் போல, சொல்வளமும் இலவசமாக வெளியிடப்படும் செயலி. சொல்வளத்தை, தொடர்ந்து உலகத் தரத்துடன் மேம்படுத்திவர பல திட்டங்களை வைத்திருக்கிறோம். இதற்குப் பொருட் செலவாகும். செயலியில் காட்டப்படும் விளம்பரங்களே தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்கான வழி. இந்த விளம்பரங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இருப்பதைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம்.

விளம்பர இடையூறுகள் இல்லாமல் விளையாட விரும்பும் பயனர்களுக்கு ஒரு வழியையும் தந்துள்ளோம். விருப்பத் தேர்வுகள் பக்கத்தில், ஒரு சிறிய கட்டணத்தை (~USD $1 மட்டுமே) கூகுள் பிளே வழியாகவோ ஆப்பிள் ஆப்சுட்டோர் வழியாகவோ செலுத்தினால், விளம்பரங்கள் முற்றாக நீக்கப்படும். கட்டணம் ஒரே ஒரு முறைதான். மீண்டும் செலுத்த வேண்டியதில்லை. செயலியை நீக்கி மீண்டும் பதிவிறக்கினாலும், முன்பு செலுத்திய கட்டணத்தை மீட்டெடுக்கலாம்.

விளம்பரம் இல்லாப் பயன்பாடு ஒரு விருப்பத்தேர்வே! இயல்பாக விளம்பரங்களோடு செயலியைப் பயன்படுத்துவதற்கு எந்தவிதக் கட்டணமும் தேவை இல்லை.

கட்டணம் செலுத்தாதிருந்தாலும், விளையாட்டின்போது எந்தவித விளம்பரமும் தோன்றாது. முழுக் கவனமும் விளையாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, விளம்பரங்களை விளையாட்டுத் திரையில் இருந்து முற்றாக நீக்கியுள்ளோம்! விளையாட்டிற்கு முன்னும் பின்னும் மட்டுமே விளம்பரங்கள் தோன்றும்.

6. மேலும் பல முன்னேற்றங்கள்

மேற்குறிப்பிட்ட முன்னேற்றங்களோடு மேலும் பல மாற்றங்களை புதிய பதிகைகளில் செய்துள்ளோம். எடுத்துக் காட்டாக, சொல்லைத் தேர்ந்தடுக்கும்போது விரலின் ஓட்டம் சற்று ஒதுங்கிச் சென்றாலும் சரியான எழுத்துக்குப் பக்கத்தில் இருந்தாலே சரியான தேர்வாக ஏற்றுக் கொள்வோம். இதன்வழி, சரியான தேர்வு பிழையாகிப் போகும் வாய்ப்பு மிகவும் குறையும். பழைய பதிகையில் இது ஒரு குறையாகவே சிலருக்குத் தென்பட்டது.

ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன், அடுத்த சொல்லுக்குக்குச் செல்லும் நேரத்தையும் குறைத்துள்ளோம். இதன்வழி, கொடுக்கப்பட்ட ஒரே நிமிடத்தில் அதிகமான சொற்களைக் கண்டுபிடிக்க வாய்ப்பமையும்.

ஆண்டிராய்டின் 4.4 முதல் 10ஆம் பதிகை வரையிலும், ஐஓஎசின் 9முதல் 13ஆம் பதிகை வரையிலும் சொல்வளம் எந்தவித இடையூறும் இன்றி இயங்கும்.

கொரோனாவின் கோர விளையாட்டினால் வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கும் பயனர்களுக்குச் சொல்வளம் போன்ற விளையாட்டுகள் பெரிதும் துணைபுரியும் என நம்புகின்றோம்!

7. பதிவிறக்க முகவரி
https://sellinam.com/apps/solvalam

குறிப்பு:
1. ஐபோன், ஐபேட் கருவிகளில் நாட்டின் விவரம் செயலியிலேயே கிடைப்பதால், இந்தக் கருவிகளில் கண்டறியப்படும் நாடு இயல்பாகப் பதியப்படும்.

சொல்வளத்தின் பயன்பாட்டைக் காட்டும் காணொளியை இங்கே காணலாம் :

-செல்லினம்