Home One Line P1 “500 நாடுகளோடு பேசியிருக்கிறேன்” – மீண்டும் இணைய வாசிகளின் கிண்டல் கேலிகளுக்கு ஆளான சுகாதார அமைச்சர்

“500 நாடுகளோடு பேசியிருக்கிறேன்” – மீண்டும் இணைய வாசிகளின் கிண்டல் கேலிகளுக்கு ஆளான சுகாதார அமைச்சர்

808
0
SHARE
Ad

புத்ராஜெயா – கொவிட் 19 பிரச்சனைகள் தொடங்கியபோது புதிதாக சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் அடாம் பாபா ஒரு மருத்துவராகவும் இருந்தவர் என்பதால் அவர் மீதான நம்பகத் தன்மையும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
ஆனால், தனது ஆரம்ப கட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின்போது வெந்நீர் அருந்துவதால் கொவிட்-19 பாதிப்பு வராது என்று கூறி அனைவரிடமும் வாங்கிக் “கட்டிக் கொண்டார்”. அதைத் தொடர்ந்து சில நாட்களாக தொலைக் காட்சிப் பேட்டிகளில் இருந்தும் நேரடி பத்திரிகையாளர் சந்திப்புகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்தார்.

கைகழுவுவது எப்படி என்ற விளக்கப் படத்தில் மட்டும் தொலைக்காட்சியில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார் அடாம் பாபா.

சுகாதார அமைச்சின் அதிகாரபூர்வ தகவல்கள் அனைத்தையும் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் மட்டுமே வெளியிட்டதோடு, தினமும் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் அவரே நடத்தி வந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் “கொவிட்-19 பரவியதற்கு முந்தைய பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம்தான் காரணம். பெட்டாலிங் தப்லிக் இஸ்லாமிய நிகழ்ச்சியைக் கட்டுப்படுத்த பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் தவறியதால்தான் கொவிட் அதிகமாகப் பரவியது” என்றும் நேற்று அறிக்கை ஒன்றின் வழி அடாம் பாபா தெரிவித்திருந்தார்.

இதற்கும் இணைய வாசிகளிடம் இருந்து கடுமையானக் கண்டனங்கள் எழுந்தன. பக்காத்தான் அரசாங்கத்தைக் கவிழ்க்க அடாம் பாபா கட்சியினர் (அம்னோவினர்) தீவிரமாக கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதால் அதன் காரணமாக சுமார் 10 நாட்களுக்கு மேல் அரசாங்கம் இல்லாத நிலைமையும் அதன் காரணமாக சுகாதார அமைச்சர் என்ற ஒருவர் இல்லாத சூழ்நிலையும் இருந்ததால்தான் கொவிட் 19 அதிகமாகப் பரவியது என இணைய வாசிகளில் சிலர் புள்ளிவிவரங்களோடு சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

“500 நாடுகளிடம்” பேசிய அடாம் பாபா

இன்று ஞாயிற்றுக்கிழமை அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடியுடன் சுகாதார அமைச்சு குறித்து தான் நடத்திய காணொளி வழி உரையாடல் பதிவை அடாம் பாபா சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

அதில் “நான் கொவிட்-19 பிரச்சனை குறித்து உலகம் முழுவதும் 500 நாடுகளுடன் பேசியிருக்கிறேன்” அடாம் பாபா கூறியிருந்தது தற்போது அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி சமூக ஊடகங்கள் முழுவதும் இது குறித்தே ஏகப்பட்ட பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதிலும் இன்றைக்கு சுமார் 200 நாடுகளே உள்ள நிலையில் அவர் 500 நாடுகளுடன் பேசினேன் என பேசியிருப்பது பெரும் நகைச்சுவை பரிமாற்றங்களை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் அறிக்கை ஒன்றின் வழி நான் 500 பேர்களுடன் பேசினேன் என்று கூறுவதற்கு பதிலாக 500 நாடுகளுடன் பேசினேன் என தவறுதலாகப் பேசிவிட்டேன் என அவர் கூறியிருந்தாலும் அவர் மீதான கிண்டல்களும் கேலிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.