சென்னை: உலகம் முழுதும் கொவிட்-19 நோய்த்தொற்று பரவி பல்லாயிரம் உயிர்களை கொன்றுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் நடமாட்டக் கட்டுப்பாட்டினை அமல்படுத்தி வருகின்றன.
ஒரு சில நாடுகளில் இந்த தொற்றினால் மரணமுற்றோரின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1000-க்கும் மேல் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் தற்போதைக்கு 17,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 559 மரணங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் மே மாதம் வரையிலும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் இந்த தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவர்கள், தாதியர்கள், காவல் துறையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல் ஒன்றினை இசையமைத்துப் பாடியுள்ளார். “நன்றி பாடல்” என்று இப்பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு கவிஞர் வைரமுத்து வரிகளை இயற்றியுள்ளார்.
“இந்த வைரஸைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் பணிபுரியும் அனைத்து உயரிய மக்களுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம். நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைக் காண்பிப்பதற்கான ஒரு முயற்சி இது. நீங்கள் அனைவரும் இப்பாடலை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி” என்று யூடியுப் பக்கத்தில் இப்பாடலின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பாடலைக் காணலாம்: