மலாக்கா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் சுங்கை மலாக்கா அதன் ‘பசுமையான’ மற்றும் தூய்மையான அடையாளத்தைப் பெற்றுள்ளதாக சமூகப்பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஸ்டாட்யூஸ் கட்டிடம் மற்றும் ஜோங்கர் சாலை உட்பட பல இடங்களில் பெர்னாமா மேற்கொண்ட பார்வையின் அடிப்படையில், ஆற்று நீர் நீண்ட காலத்திற்குப் பிறகு சுத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த மார்ச் 18 அன்று செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, சுங்கை மலாக்காவின் நீர் கருமையாக இருந்ததாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆள் சவாரி வண்டி ஓட்டுனர், ஜோசப் ஒலிவேரா, 54, புத்துயிர் பெற்ற சுங்கை மலாக்காவின் படங்கள் காட்டப்பட்டபோது புன்னகைத்ததாகவும், தனது எட்டு ஆண்டுகளில் பணியாற்றிய காலத்தில் இந்த ஆற்று நீர் சுத்தமாக இருந்து பார்த்ததில்லை என்றும் கூறினார்.
“சுங்கை மலாக்காவில் செயல்பாடுகள் இல்லாததால் இப்போது நீர் சுத்தமாக இருக்கிறது. முன்னதாக, படகுகள் ஆற்றில் ஓடுவதால் அது கலங்கி இருந்தது. இதனால் அதன் நீர் கருமையாக இருக்கும்” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.