கோலாலம்பூர்: வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட சலிப்பு காரணமாக இரண்டு மியான்மர் ஆடவர்கள் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள செலாயாங் பாருவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறி முள்வேலி வழியாக தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் முள் கம்பியின் மீது விழுந்ததில் காயமடைந்தார் .
கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறுகையில், 23 மற்றும் 24 வயதுடைய இருவர் நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றதால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
“ஒரு நபர் விழுந்து முள் கம்பியில் சிக்கி கை, கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்” என்று அவர் கோம்பாக் மாவட்ட காவல் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதுவரையிலும், செலாயாங் பாருவில் 3,000- க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் 60 விழுக்காட்டினர் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.