கோலாலம்பூர்: அரசாங்கம் அறிவித்துள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாநில அரசுகள் இணங்கி நடக்குமாறு அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
அவ்வாறு செய்யத் தவறினால் பாதிக்கப்பட்ட வணிகங்களிடமிருந்து சாத்தியமான வழக்குகளை அவை சந்திக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டுடன் இணங்க மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று அவர் கூறினார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988- இன் கீழ் இந்தக் கொள்கை ஏற்கனவே வர்த்தமானி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தானாகவே செயல்பட்டது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார். அவர்களின் கோரிக்கைகளின் பேரில் தரமான இயக்க நடைமுறைகள் முன்கூட்டியே அவர்களுக்கு அனுப்பப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
“முடிவை நிறைவேற்ற மறுப்பதில் பல்வேறு மாநில அரசாங்கங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டை மத்திய அரசு தீவிரமாக கருதுகிறது.”
“அவர்களின் நடவடிக்கைகள் சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டவை அல்ல, அவை மத்திய அரசின் கொள்கைக்கு முரணானவை. மத்திய அரசின் கொள்கை ஏற்கனவே சட்டமாக உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்படக்கூடியது” என்று அஸ்மின் கூறினார்.
மே 1-ஆம் தேதி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு மே 4 முதல் அமலில் இருக்கும் என்று பிரதமர் அறிவித்தார். இதனால் ஏராளமான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.