கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நாடு முழுவதும் 46 நாட்களுக்குப் பிறகு, நேற்று திங்கட்கிழமை மீண்டும் கிட்டத்தட்ட எல்லா வணிகங்களையும் செயல்பட அனுமதித்தை அடுத்து, ஏராளமான நடுத்தர மற்றும் பி40 பிரிவினர் நகை அடகுக்கடைகளில் வரியையாக நின்றுக் கொண்டிருந்த புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
ஈப்போவில் ஏராளமான மக்கள் தங்கள் நகைகளை கொடுத்து பணத்தைப் பெற காத்துக் கொண்டிருந்ததாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நிறைய தொழிலாளர்கள், மக்கள் வேலையில்லாமல் இருப்பது இது பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் ‘பஜாக்கிங்’ கிளையை நடத்தி வரும் பிரீமேன் டான், வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய தங்கத்தைக் கொடுத்து பணத்தைக் கடனாகப் பெற காத்திருந்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானத்தைப் பெறும் மக்கள்.
மார்ச் மாதத்திலிருந்து நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டதிலிருந்து அவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரசாங்கம் வழங்கிய உதவி நிதி மற்றும் பிற உதவிகள் இந்த பிரிவினரைச் சென்று சேர்ந்தனவா என்ற கேள்வியும் மக்களிடத்தில் எழுந்துள்ளது.