கோலாலம்பூர் – பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான துன் மகாதீரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள மஇகா, எதிர் கட்சியினரின் நாடகங்களுக்கும் விளையாட்டுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள் என அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
“தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான காலகட்டத்தில் மக்கள் நலன்களைப் பற்றித்தான் பேச வேண்டும். முறையாக மாமன்னரால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையில்லாத ஒன்று” என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் மொகிதின் பதவி விலக வேண்டும். அல்லது மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட அவர் மாமன்னருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் சிவராஜ் சுட்டிக்காட்டினார். “இந்த காலகட்டத்தில் பொதுத் தேர்தல் சாத்தியமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் விளையாட்டுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என அவைத் தலைவருக்கு ஆலோசனை கூறுவதாகவும் சிவராஜ் தெரிவித்தார்.
எனவே, மே 18 நாடாளுமன்றக் கூட்டம் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் களமாக இருக்க வேண்டுமே தவிர மொகிதினின் அரசாங்கம் சட்டபூர்வமானதா என்பது குறித்த விவாதங்கள் நடைபெறக் கூடாது என்றும் சிவராஜ் வலியுறுத்தினார்.