கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனலுக்கான 2.3 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மொத்தமாக 1.7 பில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு வருமான வரித்துறை புதிய விண்ணப்பம் மற்றும் முறையீடு குறித்த மதிப்பீட்டை நிறைவு செய்த பின்னர் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் தெங்கு சாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
“புதிய விண்ணப்பம் மற்றும் மேல்முறையீட்டின் ஒப்புதலுடன், இதுவரை மொத்த பிபிஎன் பெறுநர்களின் எண்ணிக்கை 10.6 மில்லியனாக உள்ளது. இதற்கான மொத்த செலவு 11 பில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கியது.” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மிகவும் கடினமான இந்த காலகட்டத்தில் பிபிஎன் பெறுநர்களுக்கு இந்த நிதியுதவி பயனளிக்கும் மற்றும் அவர்களின் சுமையை எளிதாக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்று அவர் கூறினார்.