புதுடில்லி – இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் சீனாவுடனான எல்லைப் பகுதியில் சீன-இந்திய துருப்புகளுக்கிடையில் கைகலப்பு மோதல்கள் சனிக்கிழமையன்று (மே 9) நிகழ்ந்திருக்கின்றன. நது லா என்ற இடத்தில் இந்தக் கைகலப்புகள் நிகழ்ந்திருக்கின்றன (வரைபடம்).
பலர் இரு தரப்பிலும் இந்தக் கைகலப்புகளினால் காயமடைந்தனர் இந்தியத் தற்காப்பு அமைச்சு அறிவித்தது.
இருதரப்பு துருப்புகளுக் ஆக்ரோஷமாக நடந்து கொள்ள முற்பட்டபோது அது கைகலப்புகளில் முடிந்திருக்கிறது. இந்தக் கைகலப்பில் சுமார் 150 துருப்புகள் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்தியத் தரப்பில் 4 இராணுவத்தினரும், சீனத் தரப்பில் 7 இராணுவத்தினரும் காயமடைந்ததாக இராணுவத் தரப்புகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் பின்னர் இருதரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சுமுக நிலைமை திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1962-ஆம் ஆண்டில் குறுகில காலப் போர் ஒன்றில் ஈடுபட்ட சீனாவும் இந்தியாவும் அதற்குப் பின்னர் இருதரப்புகளும் எல்லைப் பகுதிகளை மீறி ஊடுருவுவதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர்.
இந்தியா, பூட்டான், சீனா நாடுகளை உள்ளடக்கிய டோக்லாம் பள்ளத்தாக்கில் 2017-ஆம் ஆண்டில் இருதரப்புகளும் நூற்றுக்கணக்கான துருப்புகளை எல்லைப் பகுதியில் திரட்டினர். இந்த இமாலயப் பிரதேசத்தில் சாலை ஒன்றை சீனா நிர்மாணிக்க முற்பட்டதை எதிர்த்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து இருதரப்புகளுக்கும் இடையில் அப்போது பதட்டம் ஏற்பட்டது.