Home One Line P1 “பெற்றோர்களுக்கு அடுத்த தெய்வமான ஆசிரியர் பெருமக்களை வணங்கிடுவோம்” – சரவணன்

“பெற்றோர்களுக்கு அடுத்த தெய்வமான ஆசிரியர் பெருமக்களை வணங்கிடுவோம்” – சரவணன்

1319
0
SHARE
Ad

புத்ராஜெயா – “உலகியல் வாழ்க்கைக்கு நம்மைப் பக்குவப்படுத்தி, நாட்டுக்கும் வீட்டுக்கும் உகந்த நன்மக்களாக நம்மை உயர்த்துவதில் மிகப் பெரும் பங்காற்றுகின்ற நம் ஆசிரியப்பெருமக்களாகிய குருவானவர்கள், வானளவு போற்றுதலுக்குரியவர்கள்” என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

மாதா, பிதாவுக்கு அடுத்த உயர் வரிசையில் இருக்கின்ற குருவானர், தெய்வத்துக்கு நிகரானவர் என்றும் அவரை எந்நாளும் வணங்க நாம் கூசி நிற்கக்கூடாது என்றும் அவர் தனது செய்தியில் அறிவுறுத்தினார்.

சனிக்கிழமை (மே 16) அனுசரிக்கப்படுகின்ற ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மஇகா தேசிய துணைத் தலைவருமான சரவணன், தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“இறையாண்மை மீது நாம் கொண்டிருக்கின்ற பயபக்தியை, தெய்வத்துக்கு நிகராக நம் முன் வாழ்த்துக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் பெருமக்களிடமும் நாம் காட்ட வேண்டும். ஒரு சாதாரண மாணவனை பார் போற்றும் சாதனையாளனாக உருமாற்றும் மந்திரக்கோலை வைத்திருக்கின்ற ஆசிரியர்கள் அசாதரணமானவர்கள்! அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறுதான் என்ன?

தியாகச் சுடர்களாக விளங்குகின்ற அவர்களை ஒரு கனம் நினைவில் நிறுத்தி, அவர்களின் சேவைக்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நாளாகத்தான் இன்று மே 16 விளங்குகிறது. நாம் செய்ய முடிந்ததெல்லாம், அந்த நல்லாசிரியர்களை தெய்வத்துக்கு நிகராக வைத்து வணங்குவதுதான்!

அந்த புண்ணியவான்களும் நம்மிடமிருந்து எந்தவொரு கைமாறும் எதிர்பார்க்காதவர்கள். அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்கள், பின்னாளில் அவர்களை விட உயர்ந்தப் பதவிகளிலும் கூடுதல் செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். ஆனால், அந்த நல்லாசிரியர்கள் தங்களின் இறுதி காலம் வரை அப்படியேதான் இருப்பார்கள்… அடுத்தடுத்த மாணவர்களை நன்மக்களாகச் செதுக்கி உலகியலுக்கு அனுப்பும் சிற்பிகளாக!

ஆதலால்தான் ஒரு வழக்கு உண்டு, “ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி” என்று!

மலேசியாவில், ஆசிரியர்களுக்கான முக்கியத்துவம் என்றுமே முதல் நிலையில்தான் உள்ளது. அவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதிலும், அவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் என்றுமே தனிக்கவனம் செலுத்தி வருகின்றது.

குறிப்பாக, தமிழாசிரியர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து, அவர்களின் துயர் நீக்குவதில் மஇகா என்றுமே முன்னிலை வகித்துள்ளது. கடந்த 10 வருடங்களில், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 10 கோடி வெள்ளி மானியம், புதிய உரிமத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளை நிறுவி – 523ஆக இருந்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை 530 ஆக உயர்த்தியது, தமிழ்ப் பாலர் பள்ளிகளை உருவாக்கியது, தமிழாசிரியர்களுக்கு தமிழ் நாட்டில் சிறப்புப் பயிலரங்கம் – சிறப்பு மாநாடு நடத்தியது, தமிழாசிரியர் விருதுகள் வழங்கி கெளரவித்தது, தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டுகால வரலாற்று கொண்டாட்டத்தை நிறைவு செய்தது, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியது, ஊதிய உயர்வு வழங்கியது என பல நற்காரியங்கள் மஇகாவின் முயற்சியால் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன”

மேற்கண்டவாறு தனது ஆசிரியர் தின செய்தியில் சரவணன் குறிப்பிட்டார்.

“தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில், ஆசிரியர் பெருமக்களுக்காகவும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் மஇகா தலைவர்கள் ஆற்றிய சேவையானது வரலாற்றில் மறைக்கப்பட இயலாதது! இப்போது பிரதமராக இருக்கின்ற டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், இந்திய சமூகத்தின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்.
அவரின் தலைமையிலான புதிய அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் தமிழாசிரியர்களின் மேன்மைக்கும் உரிய நடவடிக்கைகளையும் திட்டங்களையும் முன்னெடுப்பார்” என்றும் தனது செய்தியில் சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நாட்டு ஆசிரியர் பெருமக்களுக்கு மஇகா என்றுமே அரணாகவும் அரசாங்கத்தின் அனுகூலங்களை பெற்றுத்தரும் உரிமைக்குரலாகவும் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் சரவணன் திட்டவட்டமாகக் கூறினார்.

சிறந்த மாணவர்களை உருவாக்கப் பாடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது நல்வாழ்த்துகளையும் சரவணன் தெரிவித்துக் கொண்டார்.