கோலாலம்பூர்: இன்று மக்களவையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க முகாமில் அமர்ந்து, பிரதமர் மொகிதின் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர்.
இன்று வெளியிடப்பட்ட மக்களவை அமர்வின் முன்மொழிவின் படி, மொத்தம் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பில் அமர்ந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட மொத்தம் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி முகாமில் அமர்ந்திருந்தனர். இந்தக் கணக்கெடுப்புகளை வைத்துப் பார்த்தால், கூடுதலாக, நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் சாய்ந்தால் மீண்டும் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
இன்று நடைபெறும் மக்களவையின் ஒரு நாள் அமர்வு 14-வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் மாமன்னர் உரையுடன் முடிவடையும்.
இன்றைய அமர்வு பலரை ஈர்த்துள்ளது.
சிறையிலிருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்துள்ளார். இதற்கு முன் ஏற்கனவே நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அன்வார் இருந்துள்ளார்.
இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், இன்றைய அமர்வில் அனுமதிக்கப்படவில்லை.