கோலாலம்பூர்: மலாக்கா அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ராஸ் ஆடிபா ராட்ஸி ஆகியோர் செனட்டர்களாக, மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றனர்.
அவர்கள் இருவரும் மூன்று ஆண்டு காலத்திற்கு முதல் முறையாக நியமிக்கப்பட்டனர்.
மே 11 முதல் நடைமுறைக்கு வந்த முகமட் அலியின், 56, நியமனம், மலாக்காவை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். அதே நேரத்தில் நேற்று நியமனம் நடைமுறைக்கு வந்த மாற்றுத் திறனாளி தலைவரான 51 வயதான ராஸ் அடிபா, மாற்றுத் திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
மேலவையில் மாற்றுத் திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்ட மூன்றாவது நபராக பெட்டாலிங் ஜெயாவில் பிறந்த ராஸ் ஆடிபா குறிப்பிடப்படுகிறார். இந்த நியமனம் ஊடகத்துறைக்கு ஒரு மரியாதை என்று அவர் விவரித்தார்.
மூத்த செய்தி ஒளிபரப்பாளரும் தேசிய பாராலிம்பிக் தடகள வீரருமான, அவர் எழுப்பவுள்ள பிரச்சனைகளில், நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.