கோலாலம்பூர்: பச்சை மண்டலங்களில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
இது சில நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 12 வயதிற்குட்பட்டவர்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று அவர் கூறினார்.
எந்த நேரத்திலும் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறிய கோயில்கள் அல்லது தேவாலயங்களில் அதைவிட குறைவானவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
“மலேசியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான நாட்களில் மட்டுமே வளாகங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.” என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்கள் திறக்கப்படலாம். அதே சமயம் இந்து மற்றும் புத்த விகாரங்கள் தங்கள் பிரார்த்தனை நாட்களைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை திறக்க முடியும்.
வழிபாட்டு வளாக நிர்வாகிகள் உடல் வெப்பநிலையை சரிபார்க்கும் கருவியைப் பயன்படுத்த வேண்டும். முகக்கவசங்கள் மற்றும் கிருமி தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கத்திற்கும், மதத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த நடைமுறை நிறுவப்பட்டதாக இஸ்மாயில் கூறினார்.
இதுவரை, 174 மத வளாகங்களுக்கு மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.