சென்னை: கொவிட்19 பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய திரையுலகமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
ஒரு சில படங்களின் படப்பிடிப்புகள் பாதிலேயே நிறுத்தப்பட்டன, மேலும், ஒரு சில படங்கள் முடிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளிக்காணாமல் நின்று போயின.
இந்த தடையால் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின் உரிமையை அமேசான் பிரைமுக்கு அண்மையில் விற்றது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களை எப்படி இணையத்தின் வழி கட்டணம் செலுத்திப் பார்க்கப்படும் தளங்களின் வழியாக வெளியிட முடியும் என்ற கேள்விகள் எழுந்தன.
நேரடியாக ஓடிடி (OTT – Over the top movies) எனப்படும் அமேசான் பிரைம் நிறுவனத்திடம் இப்படம் விற்கப்பட்டுள்ளது.
அதையடுத்து பல சர்ச்சைகளைக் கடந்து, ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் அமேசான் பிரைம் நிறுவனத்தில் மே 29-ஆம் தேதி வெளியிடப்படுவதாக தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று இரசிகர்களை கவரும் வகையில் இந்த படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி இருந்தது. கொவிட்19 காலக்கட்டதில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் எனும் பட்சத்தில், இப்படம் இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: