சென்னை: தமிழகத்தில் ஒருபுறம் கொவிட்-19 தொற்று பரவுதல் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக அரசியல் சர்ச்சைகள் பின்தள்ளப்பட்டிருந்தன.
தற்போது கொவிட்-19 பிரச்சனைகளுக்கு பழக்கப்பட்டு விட்ட தமிழக மக்களிடையே மீண்டும் அரசியல் சர்ச்சைகள், அதிலும் குறிப்பாக சாதிய சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அதிமுகவும், திமுகவும் மும்முரமாகத் தயாராகி வருகின்றன.மற்ற சிறிய கட்சிகள் இந்த இரு கட்சிகளில் ஒன்றுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இன்னொரு புறத்தில் ரஜினிகாந்தும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட தீவிரப் பணிகளில் இறங்கியுள்ளார்.
தமிழகத்தில் எப்போதுமே சாதி அரசியல் மறைமுகமாக, பின்னணியில்தான் இருந்து வரும்.
ஆனால் கடந்த சில வாரங்களாக பகிரங்கமாக முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழகத்தில் சாதி அரசியல் சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
பாஜக தலைவராக பட்டியல் இனத் தலைவர் நியமனம்
பாஜகவின் தமிழ் நாடு தலைவராக அண்மையில் முருகன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பது பகிரங்கமாக ஊடகங்களில் வெளியானது.
தமிழகத்தில் பட்டியல் இனம் என்பது தலித் மக்கள் உள்ளிட்ட மிகவும் பின்தங்கிய மக்களுக்கான பட்டியல் ஆகும்.
அதைத் தொடர்ந்து இந்து தலித் மக்களிடையே ஆதரவு திரட்டுவதற்காக இந்த நியமனத்தின் மூலம் பாஜக வியூகம் வகுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் முருகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் என்பதாலேயே இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது என பாஜக தரப்பில் கூறப்பட்டது.
திமுகவில் இருந்து பாஜகவில் சேர்ந்த துரைசாமி
சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி முருகனைச் சென்று சந்தித்தார் என்பதற்காக அந்தப் பதவியில் இருந்து துரைசாமியை திமுக நீக்கியது. அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி அதிரடியாக நேற்று வெள்ளிக்கிழமை (மே 22) பாஜகவில் சேர்ந்தார். வழக்கமாக திமுக, அதிமுக கட்சிகளுக்கிடையில்தான் கட்சி மாறுவது நடக்கும். அந்த வழக்கத்தை மாற்றி பாஜகவில் இணைந்தார் துரைசாமி. இவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராவார்.
சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவின் தலைவர்களில் ஒருவரான அரசகுமார் திமுகவில் இணைந்தார். அதற்கு பதிலடியாக துரைசாமியின் கட்சி மாற்றம் பார்க்கப்படுகிறது.
“திமுகவில் தலித் உறுப்பினர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர். மற்ற சாதிக்காரர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் ஒரு விதமாகவும் மற்ற சாதித் தலைவர்கள் வேறுவிதமாகவும் நடத்தப்படுகின்றனர்” என்று துரைசாமி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முழக்கியுள்ளார்.
இதற்கிடையில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் “நாங்கள் தமிழக அரசு தலைமையகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் போல் நடத்தப்பட்டோம்” என்று கூறியதும் சர்ச்சையாகி அவர்மீது கண்டனங்கள் எழுந்தன.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் பட்டியலின மக்களை தனது உரையில் அவமதித்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை (மே 22) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இடைக்காலப் பிணையில் (ஜாமினில்) விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிபோது ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசினார் என காவல் நிலையத்தில் புகார்கள் செய்யப்பட்டிருந்தன.
அந்தப் புகார்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாரதி திமுக சார்பில் இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராகவும் (ராஜ்யசபா) செயல்படுகிறார்.
நேற்று நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட பாரதிக்கு இடைக்கால பிணையை வழங்கிய நீதிபதிகள் அவரைத் தடுத்து வைக்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையில் தனது பேச்சு ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டிருக்கிறது என பாரதி கூறியிருக்கிறார்.