கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை (மே 25) நோன்புப் பெருநாளின் இரண்டாவது நாளில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இல்லங்களில் விருந்துபசரிப்புகளுக்கு வருகை தருவதற்கு இனி அனுமதியில்லை என உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருகையாளர்களை 20 பேர்களுக்குள் கட்டுப்படுத்துவது உட்பட, இயக்க நடைமுறைகளும் (SOP) கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹரிராயா கொண்டாட்டங்களின் முதல் நாளில் மட்டுமே வருகைகளை அரசாங்கம் அனுமதித்துள்ளது. மக்கள், கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்கள் தொழுகைக்காகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் வீடுகளிலேயே தொழுகைகளை நடத்தியிருக்கின்றனர்.
மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் கடுமையானத் தடைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில், பலருக்கும் வரப் பிரசாதமாக அமைந்திருப்பது காணொளி வழி உரையாடல்களாகும். தங்களின் அன்புக்குரியவர்களோடு இணைவதற்கு காணொளி வழியான அழைப்புகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.