புத்ரா ஜெயா – கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் செர்டாங், தாமான் செர்டாங் ராயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்ற இந்துத் திருமணம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தடைகளை மீறி இந்தத் திருமணம் நடந்திருப்பதாக புகைப்படங்களோடு முகநூலில் விவரங்கள் பகிரப்பட்டன. அதைத் தொடர்ந்து முதலில் அப்படி ஒரு திருமணம் நடைபெறவில்லை என முதலில் மறுத்தது ஆலய நிர்வாகம். எனினும் பின்னர் ஒப்புக் கொண்டது.
இதைத் தொடர்ந்து அந்தத் திருமணத்தை நடத்தியவர்கள், கலந்து கொண்டவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் நோக்கில் அவர்களை அடையாளம் காணும்பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அறிவித்திருக்கிறார்.
முஸ்லீம் அல்லாதார்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுவது எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குப் பின்னர்தான் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியே திறக்கப்பட்டாலும், திருமணங்கள் நடத்தப்படுவதோ, உணவுகள் பரிமாறப்படுவதோ அனுமதிக்கப்படாது என்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி நினைவுறுத்தியிருக்கிறார்.
நடைபெற்ற அந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு அறிக்கை ஒன்றைத் தாங்கள் அனுப்ப வேண்டியிருப்பதாகவும், அதில் திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் பட்டியலையும் தாங்கள் அனுப்பியுள்ளதாகவும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் இந்தத் திருமணத் தகவலை வெளியிட்ட பொதுமக்களில் ஒருவர் தனக்கு பாதுகாப்பு தேவை என காவல் துறையில் புகார் ஒன்றையும் செய்திருக்கிறார். திருமணம் நடந்த தகவலை பகிரங்கமாக்கியதைத் தொடர்ந்து அந்நபரின் சொந்த புகைப்படங்கள் வாட்ஸ்எப் செயலியின் வழி பகிரப்பட்டிருப்பதால் தனக்கு பாதுகாப்பு மிரட்டல் ஏற்பட்டிருப்பதாகவும் புகார் செய்த நபர் கூறியிருக்கிறார்.
செர்டாங் காவல் துறைத் தலைவர் துணைக் காவல் ஆணையர் (ஏசிபி) இஸ்மாடி போர்ஹான் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளையும் மீறி திருமணத்திற்கு வருகை தந்து மொய் எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டிய நிலைமைக்கும் ஆளாகலாம்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகளை மீறிய சிலருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.