Home One Line P2 சூதாட்ட விடுதிகளின் “தந்தை” ஸ்டான்லி ஹோ – சுவையான சில தகவல்கள்!

சூதாட்ட விடுதிகளின் “தந்தை” ஸ்டான்லி ஹோ – சுவையான சில தகவல்கள்!

822
0
SHARE
Ad

ஹாங்காங் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 26) தனது 98-வது வயதில் காலமானார் சூதாட்ட விடுதிகளின் தந்தை எனப் பிரபலமாகியிருந்த ஸ்டான்லி ஹோ.

ஆங்கிலப் படங்களிலும் சீனப் படங்களிலும் “கோட்ஃபாதர்” என சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் கூட்டத் தலைவனைக் காட்டியிருப்பார்கள். ஏறத்தாழ அத்தகைய வாழ்க்கையைக் கொண்டவர் ஸ்டான்லி ஹோ.

அவரைப் பற்றியும், அவரது வாழ்க்கையின் சில சுவாரசியங்களைப் பற்றியும் பல்வேறு காலகட்டங்களில் ஊடகங்களில் வெளியான சில சுவைத் தகவல்கள் இவை:

  • செவ்வாய்க்கிழமை தனது தூக்கத்திலேயே உயிர் நீத்த ஸ்டான்லி ஹோ அதிகமாக வெளியில் காணப்படாதவர். பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்து கொண்டதில்லை. பார்ப்பதற்கு முதுமை தெரியாத இளமைத் தோற்றம் கொண்டவர்.
  • மக்காவ் என்ற சிறிய தீவு சூதாட்ட விடுதிகளின் மையமாக உலகப் புகழ் பெறக் காரணமாக இருந்தவர் இவர். நூறு ஆண்டுகளாக போர்ச்சுகல் நாட்டின் காலனித்துவ தீவாக இருந்த மக்காவ் சீனாவிடம் 1999-ஆம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் தாரைவார்க்கப்பட்டது.
  • சுமார் 40 ஆண்டுகளாக மக்காவ் தீவு முழுவதும் சூதாட்ட விடுதிகளை நடத்தும் உரிமம் ஸ்டான்லி ஹோ ஒருவருக்கே வழங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக சூதாட்ட மையங்களையும் அதன் தொடர்பான தங்கும் விடுதிகளையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தார் அவர்.
  • அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரம் லாஸ் வெகாஸ். ஆசியாவின் லாஸ் வெகாஸ் என மக்காவ் புகழ் பெறும் அளவுக்கு அதனைத் தனிமனிதனாக அரசாங்க உதவியுடன் மாற்றிக் காட்டியவர் ஸ்டான்லி ஹோ.
  • மக்காவ் மீண்டும் சீனா வசம் வந்த பிறகுதான் அவரது ஆதிக்கமும் ஏகபோக உரிமங்களும் ஒரு முடிவுக்கு வந்தன. 2002 முதல் வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்களுக்கும் மக்காவ் தீவின் கதவுகள் திறக்கப்பட்டன. முன்பைவிட மேலும் பிரம்மாண்ட சூதாட்ட விடுதிகள் அந்தத் தீவில் உதயமாகின.
  • 1921-இல் ஹாங்காங்கில் பிறந்த ஸ்டான்லி ஹோ நாளடைவில் மக்காவ் தீவுக்கு சென்று தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
  • தனது அரசபோக வாழ்க்கைக்கு ஏற்ப, நான்கு மனைவியரையும் 17 பிள்ளைகளையும் கொண்டவர்.
  • சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஹாங்காங் உள்ளிட்ட பிரதேசங்களில் மக்காவ் தீவில் மட்டுமே சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன.
  • சூதாட்ட விடுதிகளின் மூலமாக ஏராளமாகச் சம்பாதித்த ஸ்டான்லி ஹோ தனது செல்வத்தின் கணிசமான பகுதியை நற்காரியங்களுக்கும் வழங்கினார்.
  • ஷன் தாக் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஹாங்காங்கில் பலதரப்பட்ட வணிகங்களை நடத்தினார் ஸ்டான்லி ஹோ. தற்போது அந்த நிறுவனத்தை அவரது மகள் பேன்சி ஹோ தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
  • கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 14.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என புளூர்பெர்க் வணிக ஊடகம் மதிப்பிட்டது.
  • மக்காவ் தீவை சீனா கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட பின்னரும் சீன அரசாங்கத்துடன் நெருங்கிய நல்லுறவு கொண்டிருந்தார் ஸ்டான்லி ஹோ. சீன அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராகப் பங்காற்றினார்.
  • ஸ்டான்லி ஹோவின் பாட்டனார் டச்சு-யூத கலப்பினத்தைச் சேர்ந்தவராவார்.
  • அந்த பாட்டனாருக்கும் சீனப் பெண்மணி ஒருவருக்கும் பிறந்தவர்கள் ஸ்டான்லியின் பெற்றோர்கள் ஆவர். அதன் காரணமாக ஸ்டான்லிக்கு வழக்கமான சீனத் தோற்றம் இல்லாமல் மேற்கத்தியவர்களின் தோற்ற சாயல் படிந்திருந்தது.
  • ஸ்டான்லியின் மைய சூதாட்ட விடுதியாகத் திகழ்வது மக்காவ் தீவில் உள்ள “கிராண்ட் லிஸ்போவா” (Grand Lisboa) என்பதாகும். அந்த சூதாட்ட விடுதியின் வரவேற்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது 218-காரட் எடையுள்ள வைரம் ஒன்று. அதன் சொந்தக்காரர் ஸ்டான்லி. அந்த வைரத்திற்கு “ஸ்டார் ஆஃப் ஸ்டான்லி ஹோ” எனப் பெயரிட்டுள்ளனர்.
  • முதுமை காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளையும், மூளை அறுவைச் சிகிச்சையையும் எதிர்நோக்கியவர் ஸ்டான்லி. 2009-இல் நேரடியாக வணிகங்களில் ஈடுபடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களிடையே சொத்துகள் பிரிப்பதிலும், எந்த வணிகத்தை யார் நடத்துவது என்பதிலும் மோதல்களும் நிகழ்ந்தன.
  • இரண்டு ஆண்டுகளாக குடும்பத்தினரிடையே நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து, ஒருவழியாக சொத்துகளை பாகப்பிரிவினை செய்தார்.
  • பால்ரூம் நடனங்களில் ஆர்வம் கொண்டவர்.
  • சூதாட்ட விடுதிகளின் தந்தை என்று கூறப்பட்டாலும், தனக்கு சூதாடத் தெரியாது, சூதாட்டப் பழக்கம் எனக்கில்லை என்றும் ஒரு முறை தெரிவித்தார்.
  • சூதாட்ட விடுதியை நடத்தும் உரிமம் எனக்கு சவாலாக இருந்தது என்பதற்காகத்தான் ஏற்று நடத்தினேனே தவிர சூதாடும் ஆர்வம் எனக்குக் கிடையாது என்று ஸ்டான்லி ஹோ கூறியதுதான் அதிசயம்!

-செல்லியல் தொகுப்பு