வாஷிங்டன் – எதிர்வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் நடைபெறவிருந்த ஜி-7 (G-7) எனப்படும் உலகின் வலிமைமிக்க 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு இந்த மாநாட்டை ஒத்தி வைப்பதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
காணொளி மூலம் இந்த மாநாடு நடத்தப்படலாம் என முதலில் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தாலும் தற்போது அந்த மாநாட்டை இரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கிய வலிமை மிக்க கூட்டமைப்பு ஜி-7 எனப்படுவதாகும்.
இந்தக் கூட்டமைப்பில் புதியதாக நான்கு நாடுகள் சேர்த்துக் கொள்ளப்படவும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இரஷியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளே டிரம்ப் சேர்த்துக் கொள்ள விரும்பும் நாடுகளாகும்.