Home One Line P2 கொவிட்-19 : ஜப்பானின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – மலேசிய வணிகங்களுக்குப் பெரும் பயன்

கொவிட்-19 : ஜப்பானின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – மலேசிய வணிகங்களுக்குப் பெரும் பயன்

1003
0
SHARE
Ad

தோக்கியோ –ஜப்பான் பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகளை உள்ளடக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது. கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து அந்நாடு அறிவித்திருக்கும் திட்டம் இதுவாகும்.

ஆசியான் நாடுகள் குறிப்பாக மலேசியா இதனால் பெரும் பயன் அடைய முடியும். இதுவே வணிக ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

ஜப்பானுக்கு மிக அருகாமையில் இருப்பது மலேசியாவுக்கு இருக்கும் சாதகங்களில் ஒன்றாகும். வரலாற்றுபூர்வ, பொருளாதார ரீதியான தொடர்புகள் மற்ற காரணிகளாகும்.

#TamilSchoolmychoice

இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் மலேசியாவுக்கான ஜப்பானியத் தூதர் ஹிரோஷி ஒக்கா.

ஜப்பானின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் சீனா போன்ற நாடுகளையே சார்ந்திருக்காமல், மற்ற நாடுகளை நோக்கி உற்பத்திகளை தடம் மாற்றுவதாகும்.

“அரசியல் நிலைத்தன்மை, நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட மக்கள் கொண்டது மலேசியா. விமானங்களுக்கான பாகங்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புகளிலும் ஈடுபட்டிருக்கும் நாடு. மூலப் பொருட்கள் உற்பத்தி, தயாரிப்புத் தொழிற்சாலைகள், விற்பனை, மையங்கள், பயனர்கள் என சிறந்த தொடர்புச் சங்கிலியையும் (சப்ளை செயின் – supply chain) கொண்டிருக்கும் நாடு மலேசியா. இதனால், ஜப்பானிய நிறுவனங்கள் சுலபமாக தங்களின் உற்பத்தி மையங்களை இங்கே மாற்றிக் கொள்ள முடியும். ஜப்பானிய நிறுவனங்களுக்குப் பொருத்தமான மாற்றாகவும் மலேசியா திகழ முடியும்” என்று ஒக்கா கூறியிருக்கிறார்.

“கொவிட்-19 தொற்றைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் வலுவான வணிகத் தொடர்பு சங்கிலி அமைப்பை உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளால் வணிகங்கள் பாதிக்கப்படக் கூடாது. அதற்காக தயாரிப்புத் தளங்களை ஒரே இடத்தில் அமைக்காமல் பரவலாக்க வேண்டும். பல நாடுகளில் பிரித்து தயாரிப்புத் தளங்களை வைத்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தால் அதை எதிர்கொள்ள முடியும்” என்றும் ஒக்கா கூறியிருக்கிறார்.

எந்த நாட்டையும் குறிவைத்து ஜப்பானின் பொருளாதார ஊக்குவிப்பு வடிவமைக்கப்படவில்லை என்பதையும் ஒக்கா சுட்டிக் காட்டினார்.

கொவிட்-19 மீட்சிக்காக பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்திற்கு 2.34 பில்லியன் டாலரை ஜப்பான் ஒதுக்கியுள்ளது.

1981-இல் பிரதமரானதும் கிழக்கு நோக்கும் கொள்கையை மகாதீர் அறிவித்தார். அதுமுதல் இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் ஜப்பானில் உயர்கல்வியையும், பயிற்சிகளையும் பெற்றிருக்கின்றனர். ஜப்பானின் திட்டத்தின் வழி பயனடைய இந்த அம்சமும் மலேசியாவுக்கு உதவும்.

கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மலேசியா வரி சார்ந்த ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் என்றும் ஜப்பானியத் தூதர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் சுமார் 1,400 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பாதி தயாரிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கின்றன.