கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஓம் தமிழ் நிறுவனம் மற்றும் அகிலம் நீ இணை ஆதரவில் ஜூன் 20, 21 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0 இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற பாடலாசிரியர் பயிலரங்கில் 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். மெட்டுக்குப் பாட்டெழுதும் போட்டியில், 58 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் முறையே முனைவர் பழனி கிருஷ்ணசாமி, மகேந்திரன் நவமணி, கவிதா வீரமுத்து, கனகராஜன், மற்றும் இளமாறன் நாகலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.
பாடலாசிரியர் பயிலரங்கின் வழியாக பல திறமையான பாடலாசிரியர்களை உருவாக்கும் அதே வேளையில், நல்ல மொழி வளம் கொண்ட பாடல்களை வெளியிட வேண்டும் என்பதே இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும்.
இதுவரை, பொங்கல், முகமுனைப் பணியாளர் , அன்னையர், ஆசிரியர் தினப்பாடல் என வெற்றியாளர்கள் பல பாடல்களை எழுதி கலைத்துறையில், முதன் முறையாகப் பாடலாசிரியர்களாக கால் பதித்துள்ளனர்.
கவிஞரும், பாடலாசிரியருமான சினேகன் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த ஆண்டின் இரண்டாவது பயிலரங்கு தொடங்கவிருக்கிறது. 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்புள்ள நிலையில், விரைந்து முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.