கோலாலம்பூர்: நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தங்களில் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஓட்டுநரின் நடவடிக்கைகள் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால் இது அவசியம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
“கட்டாய சிறைத் தண்டனை இருக்க வேண்டும் (முன்னெச்சரிக்கையாக). அது அவர்களை (குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை) தடுக்கும்.
“எனவே, நீங்கள் அவர்களை விடுவித்தால் (கட்டாய சிறைத் தண்டனை இல்லாமல்) – அதை நீதிபதியிடம் ஒப்படைக்க நேரிடும். பின்னர் ஒரு நீதிபதியிடமிருந்து இன்னொருவருக்கு தீர்ப்புகளில் வேறுபாடு இருக்கலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்டத்தை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்க மேலும் சாலை நடவடிக்கைகள் நடத்தப்படுமா என்றும் கேட்டபோது அவர் இதனைக் கூறினார்.