Home One Line P2 பெட்ரோனாஸ் தலைவர் வான் சுல்கிப்ளி, மாஸ் தலைவராக திடீர் மாற்றம்

பெட்ரோனாஸ் தலைவர் வான் சுல்கிப்ளி, மாஸ் தலைவராக திடீர் மாற்றம்

790
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் அதிகாரபூர்வ எண்ணெய் வள நிறுவனமான பெட்ரோனாஸ் தலைவராக செயல்பட்டு வந்த வான் சுல்கிப்ளி வான் அரிபின் திடீரென அவரது பொறுப்புகளில் இருந்து பதவி விலகியிருக்கிறார்.

அவர் தற்போது மாஸ் விமான நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது பிரதமர் மொகிதின் யாசின் எடுத்திருக்கும் முடிவாகும்

இந்த திடீர் முடிவு மலேசிய வணிக வட்டாரங்களில் ஆச்சரியத்தையும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஊகங்களுக்கும் வித்திட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

உலகின் முதல் 500 மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களில் ஒன்று பெட்ரோனாஸ் ஆகும்.

அந்த நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தவர் வான் சுல்கிப்ளி. 1983-ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

கடந்த 1 ஏப்ரல் 2018-இல் மூன்றாண்டுகளுக்கு பெட்ரோனாஸ் தலைவராக நியமிக்கப்பட்டவர் வான் சுல்கிப்ளி. எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில்தான் அவரது பதவிக்காலம் முடிவடையவிருக்கிறது.

அவரது பதவி விலகலைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாஸ் விமான நிறுவனத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. அவர் ஏன் பெட்ரோனாஸ் நிறுவனத்திலிருந்து பதவி விலகினார் என்பது இதுவரை நிறுவனத்தால் முறையாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் இன்று மாலை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி பெட்ரோனாஸ் குழுமத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக தெங்கு முகமட் தவுபிக் தெங்கு அசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நிர்வாக உதவித் தலைவராகவும் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியவர் தெங்கு முகமட் தவுபிக்.

இதன் தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் மொகிதின் யாசின், சவாலான இந்த காலகட்டத்தில் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் அரசாங்க நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக பல மாற்றங்களை செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

உலக அளவில் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பெட்ரோனாஸ் தலைவராகப் பணியாற்றிய வான் சுல்கிப்ளிக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக்கொண்டார். அவர் சிறப்பான சேவையை வழங்கி இருக்கின்றார் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தனது புதிய பதவியின் மூலம் வான் சுல்கிப்ளி மாஸ் நிறுவன தலைவராக சிறப்பாக செயல்படுவார் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அந்நிறுவனத்தை சிறப்பாக வழிநடத்துவார். அதன் மறுசீரமைப்பை மேற்கொண்டு அதை ஒரு சிறந்த தேசிய விமான நிறுவனமாக, தனது சிறந்த நிர்வாகத் திறன் கொண்டு விரிவாக்கம் செய்வார் என நம்புவதாகவும் பிரதமர் கூறியிருக்கின்றார்.