சென்னை – கடந்த ஆண்டில் கௌதம் வாசுதேவ மேனன் – பிரசாத் முருகேசன் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இணைய தொடர் குயின்.
மறைந்த நடிகையையும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரித்த இந்த இணைய தொடரின் முதல் பாகம் இலவசமாகவே வெளியிடப்பட்டது. அனைவராலும் பார்க்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் எப்போது என்ற ஆர்வம் சினிமா இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. காரணம் முதல் பாகம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை முழுமையாகக் கூறாமலேயே முடிவடைந்திருந்தது.
குறிப்பாக அவரது அரசியல் பிரவேசம் குறித்த சம்பவங்கள் இணையத் தொடரில் இடம் பெறவில்லை.
ஜெயலலிதாவின் கதை என்று கூறப்பட்டாலும் அவ்வாறு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அந்த இணையத் தொடர் காட்டிய சக்தி சேஷாத்திரி என்ற நடிகையின் வாழ்க்கை சம்பவங்கள் அச்சு அசலாக ஜெயலலிதா உண்மை வாழ்க்கையை ஒத்திருந்தன. யாரும் கூறாமலேயே இது ஜெயலலிதாவின் கதைதான் என்பது அனைவருக்கும் தெரிந்தது. கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த இணையத் தொடரின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
கொவிட்-19 பாதிப்புகளால் இன்னும் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இரண்டாவது பாகத்தில் மீண்டும் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த சக்தி சேஷாத்திரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இது குறித்து அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் குயின் இணையத் தொடரில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்
தொடரின் இரண்டாவது பாகத்தில் மேலும் பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பான கதை அம்சங்களும் இணைக்கப்பட்டு இருப்பதாக ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கின்றார்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மற்றொரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது “தலைவி”. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் உருவாகியிருக்கின்றது. இதில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கின்றார்.
இந்த ஜூன் மாதத்தில் வெளியாகவிருந்த இந்தப் படம் திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் இன்னும் வெளியிடப்பட முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்தப் படத்தையும் கட்டண இணையத் தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே அமேசோன் இணையதளத்தில் “பொன்மகள் வந்தாள்” என்ற ஜோதிகா நடித்த படம் வெளியிடப்பட்டு பரவலான வரவேற்பையும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.