கோலாலம்பூர்: நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் போது நாடெங்கிலும் அமைக்கப்பட்ட காவல் துறை மற்றும் இராணுவத்தின் சாலைத் தடுப்புகள் மீட்டுக் கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்து, மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை அனுமதித்தார்.
இதன்மூலமாக நாட்டில் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் இனி சாலை தடுப்புகள் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று நேற்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.
ஆயினும், நாட்டின் எல்லைகளில் ‘ஓப்ஸ் பெந்தேங்’ எனப்படும் சட்டவிரோத குடியேறிகளின் நாட்டினுள் ஊடுருவுவதை தவிர்ப்பதற்காக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தீவிரப்படுத்தப்படும் இந்த நடவடிக்கை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும் என்று அவர் கூறினார்.