கோலாலம்பூர்: குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் மோசமாக நடத்தப்படுவதாக கூறும் சமூக ஆர்வலர் ஒருவரின் குற்றச்சாட்டை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி குடிநுழைவுத் துறை தடுப்பு மையத்தில், புதிதாக குழந்தையை பெற்றெடுத்த பெண்ணொருவர் மோசமாக நடத்தப்படுவதாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன இயக்குனர் ஹைடி குவா, குற்றம்சாட்டியது குடிநுழைவுத் துறைத் தலைவர் கைருல் டிசைமி மறுத்தார்.
தடுப்புக் காவலின் போது ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் மரணங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கு தேவையான உணவும், சுத்தமான நீரும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து எந்த ஒரு வருகையாளரும் குடிநுழைவுத் துறைத் தடுப்பு மையங்களுக்குள் அனுமதித்ததில்லை என்று அவர் கூறினார்.
ஆகவே, சம்பந்தப்பட்ட முகநூல் பயணர் எந்த தடுப்பு காவலுக்கு சென்றதாகவும் அதன் இடத்தையும் குறிப்பிட வேண்டும் என்று கைருல் ஓர் அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டார்.
அனைத்து பள்ளிகளுக்கும் தரமான உணவும் ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு ஏற்ப உணவு முறைகளும் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபர் பயன்படுத்திய புகைப்படமும் கடந்த 2008-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குடிநுழைவுத் துறை காவல் துறையில் புகார் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், இம்மாதிரியான தவறான அவதூறுகள் அத்துறையின் மீது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.