Home One Line P2 கொவிட்19: திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார் – இன்றே நல்லடக்கம்

கொவிட்19: திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார் – இன்றே நல்லடக்கம்

807
0
SHARE
Ad

சென்னை: (மலேசிய நேரம் பிற்பகல் 2.30 மணி நிலவரம்) திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று வியாழக்கிழமை அவரது 62-வது பிறந்தநாளில் காலமானார். அவரது பிறந்த நாளன்றே அவர் இறந்த சோகத்தை அவரது குடும்பத்தினர் எதிர்நோக்கியுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான அவருக்கு கொரொனா தொற்று பீடித்துள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கல்லீரல் பிரச்சனையால் வெளிநாட்டுக்கு சென்று அறுவைச் சிகிச்சை சிகிச்சை செய்து கொண்டவர் அன்பழகன்.

அவரது உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இன்றே நல்லடக்கம்

#TamilSchoolmychoice

மறைந்த அன்பழகனின் நல்லுடல் இன்றே நல்லட்டக்கம் செய்யப்படவிருக்கிறது. கொரொனா தொற்று பாதிப்பினால் அவர் இறந்திருப்பதால், அவரது நல்லுடல் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நல்லடக்கச் சடங்குகள் நடைபெறுகின்றன.

அன்பழகனின் தந்தையார் பழக்கடை ஜெயராமனும் அந்தக் காலத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியோடு நெருக்கமானவராக இருந்தவர். மிசா காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றாக சிறையில் இருந்தவர் பழக்கடை ஜெயராமன்.

ஸ்டாலினைக் காண கருணாநிதி அடிக்கடி சிறைக்கு வந்த தருணங்களில் அன்பழகனும் தனது தந்தையாரைக் காண சிறைக்கு வருவார். அப்போது கலைஞருடனும் ஸ்டாலினுடனும் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக அன்பழகனும் திமுகவில் தீவிரமாக இயங்கினார்.

அவரது தந்தையார் பழக்கடை ஜெயராமன் சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அதே பகுதியில் அன்பழகனும் குடும்ப வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து அவரது நல்லுடல் நேரடியாக கண்ணம்மா பேட்டை மயானத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

தலைவர்கள் இரங்கல்

இதற்கிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “அன்புச் சகோதரா அன்பழகா என்று காண்பேன் உனை இனி” என உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தொடர்ந்து பல்வேறு திமுக தலைவர்களும், அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

நல்லடக்கச் சடங்குகளில் திமுகவின் திரளாகக் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.

நல்லடக்கச் சடங்குகள் தொடங்கின

உதயநிதி ஸ்டாலின் முன்னின்று திமுக சார்பில் அன்பழகனின் நல்லடக்கப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்திய நேரப்படி நண்பகல் 12.10 மணியளவில் (மலேசிய நேரம் பிற்பகல் 2.40) அன்பழகனின் நல்லுடல் மருத்துவமனையில் இருந்து மயானத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டது.