கோலாலம்பூர்: ஆரம்பப் பள்ளிக்கான பள்ளி தொடக்க நாளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்குமாறு தீபகற்ப மலேசியாவின் தேசிய ஆசிரியர் சேவை சங்கம் (என்யூடிபி) கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயினும், அது அப்போதைய நிலைமையை பொருத்து, தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து எடுக்கும் முடிவைப் பொறுத்தது என்று அதன் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்தார்.
“கொவிட்-19 பாதிப்பு முடிந்தவுடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ஆரம்பப் பள்ளிகளை திறக்கலாம். இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிக்கு எப்போதும் போல திரும்புவதற்கு உதவியாக இருக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தாலும்கூட ஆசிரியர்கள் இயங்கலை மூலம் மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து போதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காக பாடங்கள் இயங்கலை வழி போதித்தனர்.