ஜோகூர் பாரு: நடிகரும் வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோ இன்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஜோகூர் பட்டத்து இளவரசர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதிக்கும் நோக்கில் கருத்துகளைப் பதிவிட்டதற்காக பேட்ரிக் தியோ குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
தியோ காங் யோங் என்ற முழுப்பெயர் கொண்ட 73 வயதான பேட்ரிக் தியோ தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி கமாருடின் கம்சுன் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.
தியோ, துங்கு இஸ்மாயிலை அவமதித்து முகநூல் பக்கத்தில் தனக்குத் தெரிந்து தகாத வாசகங்களைக் கொண்ட பதிவை மே 8-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் இட்டதாக அவர் மீதான குற்றப்பத்திரிகை விவரிக்கின்றது. மற்ற மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தோடு அவர் இந்தப் பதிவை இட்டார் என்றும் குற்றப் பத்திரிக்கை தெரிவித்தது.
ஜோகூர் காவல் துறையினருக்கு பொதுமக்களிடமிருந்து புகார் அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து தியோ கடந்த மே 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மே 14 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
பேட்ரிக் தியோ ஜோகூர் இளவரசரின் காணொளி ஒன்றைத் தனது முகநூலில் பதிவிட்டு அதன் தொடர்பில் சில தரக் குறைவான வாசகங்களைப் பதிவிட்டதாக அவர் மீது புகார் செய்யப்பட்டிருந்தது.
தொடர்பு, பல்ஊடக சட்டத்தின் 233-வது பிரிவின் கீழ் பேட்ரிக் தியோ இன்று குற்றம் சாட்டப்பட்டார். இணையத் தொடர்பு வசதிகளை தவறான முறையில் பயன்படுத்துவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தியோ, 10 ஆயிரம் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார். விசாரணைக்கான அடுத்த தேதியை ஜூலை 20-க்கு நீதிபதி நிர்ணயித்தார்.