கோலாலம்பூர் : மஇகாவின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே.ராமலிங்கம், மலேசிய தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க சார்பு நிறுவனமான இந்த மீன்வள வாரியத்தின் இயக்குநர் பொறுப்புக்கு ஓர் இந்தியர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
நீண்ட காலமாக, மஇகா பத்து தொகுதியின் வழி கட்சியில் ஈடுபாடு காட்டி வந்திருப்பவர் ஏ.கே.இராமலிங்கம். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து, கட்சிப் பணிகளில் முழு மூச்சாக களமிறங்கி வருகின்ற ஏ.கே.ராமலிங்கத்திற்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மஇகாவினர் மத்தியில் , வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதே வேளையில், அரசு சார்பு நிறுவனங்களில் இந்தியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற மஇகாவின் கோரிக்கைக்கு ஏற்பவும் இந்த நியமனம் அமைந்துள்ளது.
கொவிட் 19 பெருந்தொற்றினால், வேலை இழப்புக்கு இலக்காகி வருகின்ற உள்நாட்டினருக்கு, மீன்வளத் துறை மூலமாக குறிப்பிட்ட சில தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதனைச் செயல்படுத்தும் அதிகாரத் தரப்புக்கு உறுதுணையாக, ஏ.கே.ராமலிங்கம் இருப்பார் என்றும் அதன் மூலம் இந்திய சமூகத்திற்கு உரிய பலன்களைப் பெற்றுத் தருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அவருக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும், அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட இராமலிங்கம், இந்த மிகப்பெரிய வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கின்ற கட்சித் தலைவருக்கும் மனிதவள அமைச்சரும் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஏ.கே.ராமலிங்கம் குறிப்பிட்டார்.
தம் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை, மிகக் கவனமுடனும் சிறப்பாகவும் கையாளவிருப்பதாக ஏ.கே.ராமலிங்கம் உறுதியளித்தார்.