Home One Line P1 “விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்” – டி.முருகையா புகழாரம்

“விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்” – டி.முருகையா புகழாரம்

1435
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூன் 22 ஆம் தேதியோடு நாடாளுமன்ற மேலவை தலைவர் பொறுப்பில் இருந்து சிறப்பான முறையில் சேவையாற்றி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் சேவையை நாடும் மக்களும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கூறினார்.

“2014 ஆண்டு முதல் 6 ஆண்டுகளுக்கு செனட்டராகவும், 2016-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மேலவைத் தலைவராகவும் விக்னேஸ்வரன் பணியாற்றியிருக்கிறார். மூன்று வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ், மூன்று மாமன்னர்களின் ஆட்சியின் கீழ், மூன்று வெவ்வேறு பிரதமர்களின் தலைமைத்துவத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர் அவர்” என்றும் டி. முருகையா இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் புகழாரம் சூட்டினார்.

“மேலவைத் தலைவராக பல்வேறு கட்சிகளைச் சார்ந்த செனட்டர்களுக்கு நியாயமாகவும், சரி சமமாக வாய்ப்புகள் கொடுத்தும் பணியாற்றியவர் விக்னேஸ்வரன்” என்றும் முன்னாள் செனட்டரும், முன்னாள் துணையமைச்சருமான முருகையா தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

டத்தோ டி.முருகையா
#TamilSchoolmychoice

“அதேவேளையில் தனது பதவிக் காலத்தின்போது இந்திய சமூகமும் பலவகைகளில் தனது பதவியின் மூலம் பயன்பெறும் வண்ணம் பல்வேறு சேவைகளை வழங்கியவர் விக்னேஸ்வரன். மேலவைத் தலைவராக அவர் எடுத்த முடிவுகள் அத்தனையும் கட்சி சார்பின்றி, அரசியல் விருப்பு வெறுப்பின்றி எடுக்கப்பட்டவையாகும். செனட்டர்களுக்கு, மதிப்பு கொடுத்தவர் அவர். அவர் சில கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் மேலவையில் ஏற்றுக் கொண்டதற்கும், நிராகரித்ததற்கும் காரணம் நாட்டு மக்களின் நலன்களுக்கும், நாட்டின் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதே ஆகும்” என்றும் முருகையா தெரிவித்தார்.

“நாடாளுமன்ற மேலவை தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் மஇகா தேசியத் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஓர் இக்கட்டான, நாடு கொந்தளிப்பான அரசியல் சூழலில் சிக்கியிருந்த காலகட்டத்தில் அவர் தேசியத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக 60 ஆண்டு கால ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்ட சோதனையான காலகட்டத்தில் அவர் கட்சியின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரவலாக மஇகா மீதான நம்பிக்கை சிதைந்து கிடந்த, மக்களிடம் கட்சி மீதான நம்பிக்கை மிகவும் குறைந்திருந்த காலகட்டத்தில் அவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது கடுமையான உழைப்பாலும் சேவையாலும் தலைமைத்துவ ஆற்றலாலும் மீண்டும் கட்சியை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளார். பல்வேறு பிரச்சனைகள், அரசியல் நிலைத்தன்மையற்ற சூழலில் மஇகா மீதான இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அவரது தலைமைத்துவம் விதைத்திருக்கிறது என்றால் மிகையாகாது” என முருகையா குறிப்பிட்டார்.

“கொவிட்-19 நாட்டை உலுக்கிய காலகட்டத்தில் அதிரடியாக உடனடி நடவடிக்கையில் இறங்கிய அவர் இந்தியாவில் சிக்கிக்கொண்ட மலேசியர்களை அவர்கள் உடனடியாக நாடு திரும்ப எடுத்த நடவடிக்கைகள் அனைத்து இனத்தினராலும் பாராட்டப்பட்டன. இன, மொழி, மத பேதமின்றி அவர் தனது சொந்த முயற்சியிலும், சில வணிக அமைப்புகள் தனிநபர்களின் உதவியோடும் மீண்டும் அவர்களை நாட்டுக்கு கொண்டு வந்து தங்கள் குடும்பத்தினரோடு சேர்த்தார். ஏறத்தாழ 18 விமான சேவைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அவரது இந்த விரிவான நடவடிக்கை பலரின் பாராட்டுக்களைப் பெற்றது” என்பதையும் முருகையா நினைவு கூர்ந்தார்.

போதிய வருமானம் இன்றி, குடும்பத்திற்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்த பல குடும்பங்களுக்கு அந்தப் பொருட்கள் கிடைப்பதை விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தினார் என்றும் முருகையா கூறினார்.

அவரது இந்த சமூக சேவை பல்வேறு மஇகா கிளைகள், நாடு முழுவதிலும் உள்ள சமூக நல இயக்கங்கள் மூலமாக விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

நாட்டை ஆண்டுகொண்டிருந்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளுக்குப் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் விக்னேஸ்வரனின் இந்த சமூக நடவடிக்கைகள் அமைந்தன. கொவிட்-19 தொடர்பில் சுகாதார அமைச்சின் சார்பிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றிய முன்னணி பணியாளர்களுக்கும் அவரது இந்த உதவிகள் சென்று சேர்ந்தன.

சமுதாயத்தில் பின்தங்கியிருந்த ஏழ்மைக் குடும்பங்களுக்கு, உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு பாரபட்சமின்றி விக்னேஸ்வரன் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கினார்.

“இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மஇகாவுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவும், நெருக்கமும் அதிகரித்தது. கட்சியின் மீதான மதிப்பும் மக்களிடையே கூடியது. கொவிட் -19 பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களின் குரலாக பல தருணங்களில் மஇகா குரல் கொடுத்தது. அதற்கும் விக்னேஸ்வரனின் வழிகாட்டுதலே காரணமாகும்” என்றும் முருகையா தெரிவித்தார்.

“உதவி” என்ற சமூக நல திட்டத்தின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு தேவையான சமூக நல உதவிகளை அவர் மேற்கொண்டதன் மூலம் மக்களின் இதயங்களில் மஇகா மீண்டும் அரியணை போட்டு அமர்ந்தது.

“விக்னேஸ்வரன் இந்த நடவடிக்கைகளின் மூலம் மஇகா மீதான நம்பகத்தன்மை இந்திய சமூகத்தினரிடையே அதிகரித்தது. எதிர்பார்க்கப்படும் 15-வது பொதுத் தேர்தல் நடந்தால் இந்திய வாக்காளர்களில் 85 விழுக்காட்டினர் மஇகா பக்கமே நின்று மஇகாவுக்கும், அது சார்ந்திருக்கும் கூட்டணிக்கும் ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது” என்றும் முருகையா வலியுறுத்தினார்.

“மஇகா குடும்பத்தில் ஓர் அங்கமாக – உறுப்பினராக – இத்தனை ஆண்டுகள் பங்குபெற்று வருபவன் என்ற முறையில் விக்னேஸ்வரன் அவர்களை ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சித் தலைவராக நான் பார்க்கிறேன். கட்சி உறுப்பினர்களுக்கு அவர் முதலிடம் கொடுத்து செயல்படுகின்றார். கட்சி பேதமின்றி இந்திய மக்கள் என்ற அளவில் அனைத்து இந்திய மக்களின் நலன்களுக்கும் அவர் பாடுபடுகிறார். கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டது முதல் பல்வேறு நிலைகளில் அனைத்து தலைவர்களுக்கும், அவரவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதற்கும், பதவிகள் பொறுப்புகள் கிடைப்பதற்கும் அவர் போராடி வருகின்றார். தனது சொந்த நலன்களைவிட, கட்சி உறுப்பினர்கள், கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து வருகின்றார். மத்திய மாநில அரசாங்கங்களிலும், அரசாங்க சார்பு நிறுவனங்களிலும் போதுமான இந்தியப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக அவர் போராடி வருகின்றார். இந்தியர்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதிலும், இதுபோன்ற விவகாரங்களில் மஇகாவும் பின்தங்கி விடக்கூடாது என்பதிலும் அவர் மிகுந்த கவனமுடன் செயல்படுகின்றார். இது போன்ற பதவிகளில் அமர்வதன் மூலம் மேலும் சிறப்பாக இந்திய சமுதாயத்திற்கு பாடுபட முடியும், சேவையாற்ற முடியும் என அவர் நம்புகிறார்” என்றும் முருகையா தெரிவித்தார்.

பகாங் மாநில இந்தியர் பிரச்சனைகளுக்காக மாநில மந்திரி பெசார் வான் ரோஸ்டியுடன் சந்திப்பு நடத்திய விக்னேஸ்வரன்

“இதுவரையில் விக்னேஸ்வரன் ஆற்றி வந்திருக்கும் சேவைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு அவர் தொடர்ந்து தனது பதவியிலிருந்து சிறப்பான சேவைகளை வழங்கி வர அவருக்கு உற்சாகத்தையும் ஆதரவையும் வழங்க வேண்டியது நமது கடமை என நான் கருதுகின்றேன். இதன் மூலம் அவர் தனது சேவையை மேலும் பொறுப்புடனும் தீவிரத்துடனும் உற்சாகத்துடனும் மேற்கொள்ள முடியும். மஇகா கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்தி, வலிமை மிக்க அரசியல் தளமாக உருமாற்றி மீண்டும் மத்திய அரசாங்கத்திலும் மாநில அரசாங்கங்களிலும் இணைத்திருக்கும் அவரது திறமைக்கு மக்கள் சார்பாக நன்றி கூறவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். மேலவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய உடன் அவருக்கு மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில் மதிப்புமிக்க உயர்ந்த பதவியை தேசிய கூட்டணி அரசாங்கம் வழங்க வேண்டும் என நான் இந்த வேளையில் கோரிக்கை விடுக்கின்றேன். இதன் மூலம் அவரது சேவை மேலும் விரிவடையும். மக்களுக்கு பயன் தரும் என்றும் நம்புகின்றேன்” என்றும் தனது அறிக்கையில் முருகையா தெரிவித்திருக்கிறார்.

அவரது தலைமைத்துவ ஆற்றலுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கும் வகையில் எந்த ஒரு பதவியை வழங்கினாலும் அதற்கேற்ப அவரால் சிறப்பாக திறனுடன் செயல்பட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கும் முருகையா “விக்னேஸ்வரன் தனது சேவைகளை  அர்ப்பண உணர்வோடு மேலும் சிறப்பான முறையில் தொடர்வதற்கு மஇகாவில் உள்ள அடுத்த கட்ட தலைவர்களான நாங்களும் நாடு தழுவிய அளவில் உள்ள உறுப்பினர்களும் அவருக்கு துணை நிற்கவும் பாடுபடவும் எப்போதும் தயாராக இருப்போம்” என்றும் உறுதிபடக் கூறினார்.